புதுடெல்லி: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது எக்ஸ் தளத்தில் நேற்று முன்தினம் இரவு சில பதிவுகளை வெளியிட்டார். அதில், ‘‘ஒரு விளையாட்டு வீரராக ரோகித் சர்மா அதிக உடல் பருமனுடன் இருக்கிறார். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். இந்தியா இதுவரை கண்டிராத ஈர்க்க முடியாத கேப்டன் அவர். முன்னாள் கேப்டன்கள் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி, கோஹ்லி, கபில் தேவ், ரவிசாஸ்திரி போன்றோருடன் ஒப்பிடுகையில் ரோகித் உலகத் தர வீரராக இருக்கிறாரா?’’ என கூறி உள்ளார். இதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. பாஜ தலைவர்கள் பலர் ஷாமா முகமதுவை பதிலுக்கு விமர்சித்தனர். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான ஷெஷாத் பொன்னவல்லா தனது எக்ஸ் பதிவில், ‘‘ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் 6 டக் அவுட், 90 தேர்தலில் தோல்வி உங்களுக்கு ஈர்க்கக் கூடியது, டி20 உலகக் கோப்பையை வென்றது ஈர்க்கக் கூடியது இல்லையா? ரோகித் சர்மா கேப்டனாக மிகச்சிறந்த சாதனைகளை படைத்து வருகிறார்’’ என்றார்.
டெல்லி பாஜ அமைச்சர் மஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், ‘‘இதுதான் காங்கிரசின் மனநிலை. அவர்களைப் பொறுத்த வரை எல்லாவற்றிலும் சரியான நபர் ஒருவர் மட்டுமே, அது ராகுல் காந்தி’’ என கூறி உள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கட்சி மேலிட எச்சரிக்கையை தொடர்ந்து தனது பதிவை ஷாமா முகமது நீக்கினார். இதுகுறித்து காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பர துறை தலைவர் பவன் கேரா கூறுகையில், ‘‘ஷாமா முகமதுவின் கருத்து கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. விளையாட்டு வீரர்களின் பங்களிப்புகளை காங்கிரஸ் மிகவும் மதிக்கிறது. அவர்களை குறைத்து மதிப்பிடும் எந்த கருத்துக்களையும் ஆதரிக்காது. ஷாமா முகமது அவரது பதிவுகளை நீக்கவும், எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்’’ என்றார். அதே சமயம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய், ஷாமா முகமதுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
The post இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் விமர்சனம்: பாஜ பதிலடி appeared first on Dinakaran.