டெல்லி: இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாஸ்ட் அப் தகவல்கள் பரவி வரும் நிலையில், போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது, இருநாட்டு எல்லைகள் மூடல், பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாக். வலைத்தள பக்கம் முடக்கம் என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வருவதால் இந்திய ராணுவத்திற்கு நிதி தேவைப்படுகிறது. எனவே, ராணுவத்துக்கு தேவையான நிதியை அளித்து உதவுங்கள் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவத்துக்கு நிதி தேவைப்படுவதாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் போலியானவை என்றும், அதில் எவ்வித உண்மையத் தன்மையும் இல்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த போலியான தகவலை நம்பி இந்திய ராணுவத்துக்காக உதவுவதாக எண்ணி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை இழக்க வேண்டாம் என ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்: ஒன்றிய அரசு விளக்கம்!! appeared first on Dinakaran.