
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ட்ரோன் தயாரிப்புக்காக பல்வேறு நாடுகளில் இருந்து ரசாயனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்கப்படுகின்றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் 32 நிறுவனங்கள், தனிநபர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வழியாக ஈரானுக்கு சோடியம் குளோரேட், சோடியம் பெர்குளோரேட், செபாசிக் ஆசிட் ஆகிய ரசாயனங்கள் சரக்கு கப்பல்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த பார்ம்லேன் நிறுவனம் சார்பில் ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் கொள்முதல் (யுஏஇ வழியாக)செய்யப்படுகிறது.

