மகாகும்ப் நகர்: உத்தரப்பிரதேசத்தில் உலகின் அதிகளவில் மக்கள் கூடும் நிகழ்வான மகா கும்பமேளா நேற்று தொடங்கியது. சுமார் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினார்கள். உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் வரலாற்று சிறப்பு மிக்க மகா கும்பமேளா நேற்று தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தை சுற்றியே இந்த கும்பமேளா நடைபெறும். இங்கு புனித நீராடினால் பாவ விமோசனம் கிடைக்கும் மற்றும் மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை. 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளா பவுஷ பவுர்ணமியுடன் நேற்று தொடங்கியது.
வரும் 14ம் தேதி மகர சங்கராந்தி, வரும் 29ம் தேதி மவுனி அமாவாசை, பிப். 9ம் தேதி வசந்த பஞ்சமி, பிப். 12ம் தேதி மாகி பவுர்ணமி, பிப். 26ம் தேதி மகா சிவராத்திரியுடன் மகா கும்பமேளா நிகழ்வுகள் நிறைவுபெறுகிறது. இந்த நாள்களில் மிக முக்கியப் பிரமுகர்கள் (விஐபி) யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து அகாடா சாதுக்கள், துறவிகள், பக்தர்கள், பொதுமக்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்துள்ளதால் மகாகும்ப நகர் களைகட்டியுள்ளது.
கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் தலா 25 லட்சம் பேர் திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடினர். முதல் நாளான நேற்று மட்டும் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினார்கள். திரிவேணி சங்கமத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக நதிகளின் குறுக்கே 30 மிதக்கும் பாலங்களும், மகாகும்ப நகரில் 450 கி.மீ. நீள சாலை, தெருக்களும் அங்கு 67,000 தெரு விளக்குககளும் அமைக்கப்பட்டுள்ளன. 55க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் களத்தில் உள்ளனர்.
* 144 ஆண்டுகளுக்கு பிறகு முக்கியத்துவம்
தற்போதைய வானியல் வரிசை மாற்றங்கள் மற்றும் கலவைகள் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக அமைந்துள்ளதால் நடப்பு மகாகும்ப மேளா மதரீதியில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
* 40 கோடி பக்தர்கள் ரூ.2லட்சம் கோடி வருவாய் எதிர்பார்ப்பு
அயோத்தி ராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு நடைபெறும் முதல் கும்பமேளா என்பதால், 40 கோடி மக்கள் கும்ப மேளாவில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் உபி அரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post உபியில் மகாகும்பமேளா கோலாகலமாக தொடக்கம் முதல்நாளில் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடல் appeared first on Dinakaran.