கன்னோஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணியின் போது மேற்கூரை கட்டுமானங்கள் இடிந்து விழுந்ததில் 23 தொழிலாளர்கள் காயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் ரயில் நிலையத்தில், அம்ருத் திட்டத்தின் கீழ் புதிய முனையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று, மேற்கூரை அமைப்பதற்கான ஷட்டரிங் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, கான்கிரீட் அமைப்பதற்கு முன்பாக தற்காலிக கட்டுமான தூண்கள் திடீரென இடிந்து விழுந்தன.
அந்த சமயத்தில் 35 தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக ரயில்வே அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியை விரைவுபடுத்தினர். இதில் 23 தொழிலாளர்கள் காயத்துடன் மீட்கப்பட்டதாக சமூக நலத்துறை இணை அமைச்சர் அசிம் அருண் தெரிவித்தார்.
20 பேருக்கு லேசான காயமும், 3 பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து மீட்புப்பணிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக வடகிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், சிறிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
The post உபி ரயில் நிலையத்தில் கூரை இடிந்து 23 பேர் காயம்: பலர் சிக்கியிருப்பதாக தகவல் appeared first on Dinakaran.