சம்பல்: மாஜி முதல்வரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மூத்த தலைவரை விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கை உத்தரபிரதேச போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டம் ஜுனாவாய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தஃப்தாரா கிராமத்தில் உள்ள தனது பண்ணையில் பாஜக மூத்த தலைவர் குல்ஃபாம் சிங் யாதவ் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அவரது பண்ணைக்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். சிறிது நேரத்தில் குப்ஃபாம் சிங் தனது படுக்கையில் படுத்துக் கொண்டார். அப்போது அந்த இளைஞர்கள் அவருக்கு விஷ ஊசியை செலுத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். நீண்ட நேரம் மயக்க நிலையில் கிடந்த அவரை, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குப்ஃபாம் சிங் இறந்தார். இதுகுறித்து ேபாலீஸ் அதிகாரி தீபக் திவாரி கூறுகையில், ‘தனது பண்ணை வீட்டில் இருந்த குல்ஃபாம் சிங் யாதவை 3 பேர் கும்பல் விஷ ஊசி செலுத்தி கொன்றுள்ளது. அவரது வயிற்றுப் பகுதியில் விஷ ஊசியை செலுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அலிகார் மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இறந்தவரின் குடும்பத்தினரிடமிருந்து முறையான புகார் எதுவும் பெறப்படவில்லை. இவ்வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திலிருந்து காலியான ஊசி மற்றும் ஹெல்மெட் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்துள்ளனர். இறந்தவரின் காலணிகள் மற்றும் கண்ணாடிகள் ஆகியன தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அலிகார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்ய முடியும்’ என்றார். முன்னதாக 2004ம் ஆண்டு குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவை எதிர்த்து பாஜக சார்பில் குப்ஃபாம் சிங் யாதவ் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post உ.பி மாஜி முதல்வரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் விஷ ஊசி போட்டு கொலை: பண்ணை வீட்டில் இருந்த போது 3 பேர் கும்பல் கைவரிசை appeared first on Dinakaran.