புதுடெல்லி: எல்லையில் வேலி அமைக்கும் விவகாரத்தில் வங்கதேசத்திற்கு பதிலடியாக அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன் விடுத்துள்ளது. வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இந்தியா, வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைவதை தடுக்கும் வகையில் எல்லையில் 5 இடங்களில் வேலி அமைக்கும் பணிகளை இந்தியா மேற்கொண்டது. இதில் மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் சுக்தேவ்பூர் பகுதியில் முள்வேலி அமைக்கும் பணி தொடங்கிய நிலையில், அதற்கு வங்கதேச எல்லை பாதுகாப்பு படை எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரனாய் வர்மாவுக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியது. வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு சென்ற பிரனாய் 45 நிமிடங்கள் எல்லை வேலி விவகாரம் குறித்து விளக்கினார். எல்லையில் வேலி அமைப்பது குறித்து எல்லை பாதுகாப்பு படை தரப்பில் இருந்து வங்கதேச படையினருக்கு ஏற்கனவே தகவல் பரிமாறப்பட்டதாகவும், எல்லையில் குற்றங்களை தடுக்க இந்தியாவுடன் வங்கதேசம் ஒத்துழைக்கும் என நம்புவதாகவும் பிரனாய் கூறி உள்ளார். இந்நிலையில், வங்கதேசத்திற்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டின் இந்தியாவிற்கான துணை தூதர் நூரல் இஸ்லாமுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று சம்மன் விடுத்துள்ளது.
The post எல்லை விவகாரத்தில் பதிலடி வங்கதேச துணை தூதருக்கு சம்மன் விடுத்தது இந்தியா appeared first on Dinakaran.