இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பரவலாக பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் அது 40-50 சதவீத அலுவலக வேலைவாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த ஆட்டோம்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் அரிந்தம் பால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் லிங்டின் தளத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கூறியதாவது: செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வரவு இந்தியாவில் ஒயிட்-காலர் ஜாப் எனப்படும் அலுவலக பணி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிபிஓ துறைகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏஐ வரவால் அலுவலக வேலைவாய்ப்புகளில் 40-50 சதவீதம் பறிபோகும் சூழல் உருவாகும். இது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவகளுக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய சவாலை உருவாக்கும்.