புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பஹல்காம் தாக்குதல், இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீடு, பீகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்டவை குறித்து பிரச்னை எழுப்பி ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன. இதற்கிடையே நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் பிரதமர் மோடி பதிலளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடர் பரபரப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் கொன்று குவித்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரின்போது போர்நிறுத்தத்துக்கு தானே காரணம் என்று மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
அத்துடன் போர் விமானங்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவலையும் அவர் இப்போது வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு இதுவரை வெளிப்படையாக எந்த தகவலையும் தரவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதுபற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி பதிலளிக்க வேணடும் என்றும் கோரியுள்ளன. அத்துடன், விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்ற பெயரில் பல கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சி நடப்பது குறித்தும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது, மேற்கண்ட பிரச்னைகளை எழுப்புவதில் ஓரணியாக செயல்பட முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கிரண் ரிஜ்ஜூஜு, எல்.முருகன் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகய், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாஜ, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் , பிஜேடி, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகய் பேசுகையில், பஹல்காம் தாக்குதல், டிரம்ப் தலையீடு, பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்டு அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு பிரதமர் மோடிக்கு உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுடன் சீனாவும் கை கோர்த்தது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுபற்றி அரசு விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், சரத்பவார் தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே ஆகியோரும், முக்கிய பிரச்னைகளில் தன்னுடைய நிலையை பிரதமர் மோடி தெளிவுப்படுத்த வேண்டும் என்றனர். பிஜேடி எம்.பி சஸ்மித் பத்ரா பேசுகையில், ஒடிசாவில் கல்லூரி மாணவி தீக்குளித்தது, 15 வயது சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்களுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றார். பாஜ கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், சிவசேனாவை சேர்ந்த எம்.பி.க்கள், ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு இந்திய எம்.பி.க்கள் குழுவினர் சென்று வந்ததன் வெற்றியை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுஜு கூறுகையில், ‘‘ நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி எதிரக்கட்சிகளை கேட்டுக் கொண்டேன். ஆளும் தரப்பும், எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நடந்து கொண்டால் நாடாளுமன்ற விவாதங்கள் அமைதியாக நடைபெறும். இன்றைய(நேற்று நடந்த) கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 54 பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் விவாதம் நடத்துவதற்கு ஒன்றிய அரசு தயாராகவே உள்ளது. நாங்கள் அஞ்சி ஓடவில்லை. ஆனால், நாடாளுமன்ற விதிகளுக்கு, மரபுகளுக்கு உட்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் எழுப்பப்பட்ட விவகாரங்கள் குறித்து மக்களவை, மாநிலங்களவையின் அலுவல் ஆய்வு குழுக்கள் கூடி இறுதி முடிவு எடுக்கும்.
சிறு கட்சிகளின் எம்.பி.க்கள் தங்களுக்கு விவாதங்களில் பேச கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். கூடுதல் நேரம் ஒதுக்கித்தர முயற்சிப்போம் என்றார்.
17மசோதாக்கள் தாக்கல்
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுஜு கூறுகையில், மழைக்கால கூட்டத்தொடரின் போது மொத்தம் 17 மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்யும். மசோதா விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றார். வருமான வரி மசோதா, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீடிப்பு உள்ளிட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி பதிலளிப்பாரா?
ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்பதை பல எதிர்க்கட்சிகள் நேற்றைய கூட்டத்தின்போது வலியுறுத்தின. ஆனால், பிரதமர் பதிலளிக்க வாய்ப்பு இல்லை என்று அரசு வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. இதுபற்றி அமைச்சர் ரிஜ்ஜுஜு கூறுகையில், வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்யாத நாட்களில் பிரதமர் மோடி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பார். தங்கள் துறை தொடர்பான விவகாரங்களுக்கு பதிலளிக்க கேபினட் அமைச்சர் நாடாளுமன்றத்தில் எப்போதும் இருப்பார்கள் என்றார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
The post ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.