ஒன்றிய பட்ஜெட்டில் கல்வி அமைச்சகத்துூககு ரூ.1.28லட்சம் கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் திருத்தப்பட்ட ரூ.1.14லட்சம் கோடியை காட்டிலும் அதிகமாகும். உயர்கல்வி துறைக்கு ரூ.50,067கோடியும், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.78,572கோடியும் கிடைத்துள்ளது.
* குழந்தை நலத்துறைக்கு ரூ. 26,889 கோடி ஒதுக்கீடு
பட்ஜெட்டில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்துக்கு திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட அதிகமாக, ரூ.26,889 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 – 25 நிதியாண்டில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு, ரூ. 23,182 கோடி திருத்தப்பட்ட மதிப்பீடாக இருந்தது. அதை விட கூடுதலாக தற்போதைய பட்ஜெட்டில் ரூ.26,889 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பங்காக, ரூ. 20,070 கோடி, ஆரம்ப குழந்தைகள் நலன், ஊட்டச் சத்து குறைபாடுகளை களைதல் திட்டங்களுக்காக செயல்படுத்தப்படும் சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷண் 2.0 திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர, ஆதிவாசி மக்களுக்காக செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி ஆதிவாசிகள் நலன் திட்டத்துக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்புக்கான வாத்சால்யா திட்டத்துக்கு நேற்றைய பட்ஜெட்டில் ரூ. 1,500 ஒதுக்கப்பட்டுள்ளது.
* 5 ஐஐடிகள் உள்கட்டமைப்பு விரிவாக்கம்
2014ம் ஆண்டுக்கு பின் தொடங்கப்பட்ட ஐந்து 6500 மாணவர்கள் கல்வி கற்பதற்கு வசதியாக உள்கட்டமைப்புக்கள் விரிவாக்கப்படவுள்ளது. ஐஐடிகளுக்கு ரூ.11,349கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் ரூ.10,467கோடியை காட்டிலும் அதிகமாகும்.
* ராணுவத்துக்கு ரூ. 6.81 லட்சம் கோடி ஒன்றிய பட்ஜெட்டில் துறைரீதியாக நிதி ஒதுக்கீடு
(ரூ. கோடியில்)
ராணுவம் 6,81,210
ஊரக வளர்ச்சி 2,66,817
உள்துறை 2,33,211
விவசாயம் 1,71,437
கல்வி 1,28,650
சுகாதாரம் 99,858
நகர்ப்புற வளர்ச்சி 96,777
தகவல் தொழில்நுட்பம் 95,298
எரிசக்தி 81,174
வர்த்தகம்,தொழில்துறை 65,553
சமூக நலம் 60,052
அறிவியல் துறை 55,679
* விளையாட்டு துறைக்கு கூடுதலாக ரூ. 351 கோடி
புதுடெல்லி: பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு கூடுதலாக ரூ.351 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.3794 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இது, ரூ. 351 கோடி அதிகம். இந்தியாவில் விளையாட்டை அடிமட்டத்தில் இருந்து ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் கேலோ இந்தியா திட்டத்துக்காக இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட தற்போது 200 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறைக்கு கூடுதலாக ஒதுக்கிய நிதியில் பெரும்பங்கை கேலோ இந்தியா திட்டத்துக்காக மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
* காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக அதிகரிப்பு
புதிய தலைமுறை நிதித்துறை சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக, காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக அதிகரித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்தியாவில் தற்போது 25 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் 34 ஆயுள் அல்லாத பொது காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. காப்பீட்டுத்துறையில் கடந்த 2015ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு உச்ச வரம்பு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த 2021ம் ஆண்டு 49 சதவீதத்தை 74 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தியது. இந்நிலையில் தற்போது 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வௌியாகி உள்ளது. இந்த உயர்வு 2047ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை அடைவதற்கான ஒரு பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது.
* 50 சுற்றுலா தலங்கள் மேம்பாடு
மாநிலங்களுடன் இணைந்து 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு நிலம் வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பாகும். சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள் இணக்கமான உள்கட்டமைப்பு பட்டியலில் சேர்க்கப்படும். நிதி மற்றும் மேம்பட்ட ஆதரவிற்கான சிறந்த அணுகல் உறுதி செய்யப்படும். சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா குழுக்களுக்கு அரசு நெறிப்படுத்தப்பட்ட இ -விசா வசதிகள் மற்றும் விசா கட்டண தள்ளுபடிகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ. 10,000 கோடி
2025-26 நிதிநிலை அறிக்கையில், நாட்டில் வளர்ந்து வரும் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10,000 கோடி நிதியுடன் கூடிய புதிய நிதித்திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டிலும், 14வது மற்றும் 15வது நிதிக்கமிஷன் சுழற்சிகளின் பங்களிப்புடன் இதேபோன்று ரூ.10,000 கோடி நிதியுடன் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. துணிகர மூலதன முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த திட்டம் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
* அரசின் ரூ. 10 லட்சம் கோடி சொத்துகளை விற்க திட்டம்
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை பணமாக்கும் திட்டம் கடந்த 2021ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து இத்திட்டத்தை மேலும் 5 ஆண்டுக்கு 2025 முதல் 2030 வரை நீட்டிக்க இருப்பதாக பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டில் இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் கோடி அரசின் சொத்துகள் விற்று பணமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்திட்டத்தில் 2021-22 மற்றும் 2022-23ல் ரூ.2.3 லட்சம் கோடி சொத்துகளும், 2023-24ல் 1.56 லட்சம் கோடி சொத்துகளும் பணமாக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டில் ரூ.6 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.10 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
* அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி
2047ம் ஆண்டுக்குள் குறைந்தது 100 ஜிகாவாட் அணுசக்தியை உருவாக்குவதற்கான அணுசக்தி திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். நாட்டில் அணுசக்தித் துறையை மேம்படுத்துவதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவில் சிறிய மாடுலர் உலைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அணுசக்தி இயக்கம் அமைக்கப்படும். 2033ம் ஆண்டுக்குள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிறியளவிலான 5 அணுசக்தி உலைகள் செயல்பாட்டுக்கு வரும். இந்த இலக்கை அடைய தனியாரின் ஒத்துழைப்பு அவசியம். அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒன்றிய பட்ஜெட் 2025: கல்வி அமைச்சகத்துக்கு ரூ. 1.28 லட்சம் கோடி appeared first on Dinakaran.