நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி 14 விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு வருண் சக்கரவர்த்தி கடும் சவால்கள் அளித்தார்.
இதனால் அவரை, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என அஸ்வின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் வருண் சக்கரவர்த்தி இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியது இல்லை. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரை நேரடியாக சேர்த்தால் எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும் அதனால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சேர்த்து அவரது திறனை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.