புதுடெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 29 ரயில்கள் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் கடுமையான பனிமூட்டம் மற்றும் தெளிவான வானிலை நிலவி வருகிறது. இதனால், வாகன போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ரயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லிக்கு, பல்வேறு நகரங்களில் இருந்து வந்து சேர வேண்டிய 29 ரயில்கள் இன்று தாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதனை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
இவற்றில் பத்மாவதி எக்ஸ்பிரஸ், உத்தர பிரதேச சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 3 மணி நேர தாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதேபோன்று அயோத்தி எக்ஸ்பிரஸ், காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் 2 மணிநேர தாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்க வந்த உறவினர்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லிக்கு பனிப்பொழிவுக்கான ஆரஞ்ச் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விடுத்துள்ள அறிவுறுத்தலில், ‘வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சாலைகளில் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும். பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்கள், ரயில்வே துறையினரிடம் தொடர்பு கொண்டு, தங்கள் பயணத்தை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்’ என்று கேட்டு கொண்டனர்.
The post கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்ச் அலர்ட்: 29 ரயில்கள், விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.