சாம்ராஜ்நகர்: போலீசார் மனம், உடலளவில் திடமாக இருக்கவும், தொப்பையை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை காக்கவும் போலீசார் கரிவரதராஜா மலையில் மலையேற்றம் மற்றும் தியானத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். சாம்ராஜ்நகர் மாவட்ட எஸ்பி கவிதா தலைமையில் தினமும் மலையற்றத்தில் நகரத்தின் மகளிர் காவல்நிலையம், நகரம், கிராமாந்திர, கிழக்கு, டவுன் சென், டிசிஆர்பி, டிஏஆரின் 34 அதிகாரிகள் மற்றும் போலீசார் மலையேற்றத்தில் ஈடுபட்டு தங்களின் உடல் ஆரோக்கியத்தை காத்து வருகின்றனர்.
தற்போது அவர்கள் தங்களின் உடல் எடையை குறைத்துள்ளனர். ஆரம்பத்தில் மேல் மூச்சு வாங்கியவர்கள் தற்போது எளிதில் மலையை ஏறி இறங்கி வருகின்றனர். சுமார் இரண்டு மாதம் இந்த மலையேற்றம் நடந்து வருகிறது. இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி பி.டி.கவிதா கூறியதாவது: போலீசாரின் மன உறுதி மற்றும் உடல் திடத்திற்காக தினமும் மலையேற்றம் பயிற்சி நடந்து வருகிறது. அவசர பணிகள் உள்ள போலீசாரை தவிர 20-25 அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு வருகின்றனர்.
வாரத்திற்கு ஒரு முறை வருவதால் பணிக்கு எந்த தொந்தரவும் இல்லை, காலை 6 மணிக்கு சாம்ராஜ்நகரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைக்கு அனைவரும் வாகனங்களில் வருகின்றனர். காலை 6.30 மணி முதல் 9.15 வரை மலையேற்றம் நடக்கிறது. சுமார் 6 கிலோமீட்டர் மலையை ஏறி பின்னர் 15 நிமிடம் யோகா- தியான பயிற்சி நடக்கிறது. இதை தொடர்ந்து, கீழே இறங்கிய பின்னர் தண்ணீர், உடல் நலத்திற்கு தேவையான பானங்களை குடித்துவிட்டு பணிக்கு செல்கின்றனர்.
மலையேற்றத்தில் கலந்து கொள்வது கட்டாயமில்லை. மூட்டு வலி உள்ளிட்ட உடல்நல கோளாறு உள்ளவர்கள், மலையை ஏற முடியாதவர்களுக்கு இதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. சிலர் மலை அடிவாரத்திலேயே வாக்கிங் செல்கின்றனர். இந்த பயிற்சியால் போலீசார் சிலர் குறைந்தபட்சம் 2 கிலோவில் இருந்து 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளனர். நீண்ட நாள் உடல் பிரச்னைகள் கட்டுக்குள் வந்துள்ளது.
குடும்ப பராமரிப்பு மற்றும் எப்போதும் பணி நெருக்கடியால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் தொப்பை போன்ற பிரச்னைகளை போலீசார் சந்தித்து வருகின்றனர். பணியிலும் உற்சாகமின்மையுடன் காணப்படுவதால் மலையேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.
இது குறித்து கான்ஸ்டபிள் இம்ரான் கூறியதாவது: காவலர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக மாவட்ட எஸ்பி பி.டி.கவிதா சோதனை அடிப்படையில் கொண்டுவந்துள்ள மலையேற்றம், தியான பயிற்சி நிகழ்ச்சிகள் அனைத்து காவல்நிலையங்களுக்கும் விஸ்தரிக்கும் எண்ணம் உள்ளது. மலையேற்ற பயிற்சிக்கு முன்னர் 90 கிலோ எடை இருந்தேன். இப்போது 85 கிலோவாக குறைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது பணியில் முன்பை விட அதிக உற்சாகமாக ஈடுபட முடிகிறது. சக போலீசாரும் எடையை குறைத்து கொண்டுள்ளனர் என்றார்.
The post கரிவரதராஜா மலையில் உடல் வலிமைக்காக தியானம்: போலீசார் ஈடுபட்டனர் appeared first on Dinakaran.