பெங்களூரு: காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு வழங்கும்படி ஒன்றிய நீர்ப்பாசன துறை அமைச்சரிடம் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கோரிக்கை வைத்தார். டெல்லி சென்றுள்ள கர்நாடக மாநில துணைமுதல்வரும் நீர்ப்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், ஒன்றிய நீர்ப்பாசன துறை அமைச்சர் டி.ஆர்.பாட்டீலை நேற்று காலை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது ‘மேகதாதுவில் அணை கட்டுவதால், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் தண்ணீரில் எந்த பாதிப்பும் இருக்காது. நீதிமன்றங்களின் உத்தரவை செயல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாகவுள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்வதுடன் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். இந்த சந்திப்பின் போது, ஒன்றிய நீர்ப்பாசன துறை இணையமைச்சர் வி.சோண்ணா, கர்நாடக மாநில அமைச்சர் போசராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
The post காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் கர்நாடகா மீண்டும் கோரிக்கை appeared first on Dinakaran.