ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழள்ளனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப். 22ம் தேதி 26 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன.இந்த தாக்குதலில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். அத்தனை பேரும் தீவிரவாதிகள். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலால் இருநாடுகளிலும் பதற்றம் தொற்றிக்கொண்டது. பாகிஸ்தான் பதிலடி தருவதை தடுக்க எல்லையில் முப்படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டன. இதையும் மீறி காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 12 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம். பாகிஸ்தானியர்களின் உயிரை பறித்ததற்கு தக்க பதிலடி கொடுப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வீரர், பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இதையடுத்து அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இது தவிர அருகிலுள்ள கிராம மக்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
The post காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் : 13 இந்தியர்கள் உயிரிழப்பு; 50 பேர் படுகாயம் appeared first on Dinakaran.