முசாபர்பூர்: குடியரசு தலைவர் உரை விமர்சன விவகாரம் தொடர்பாக சோனியா, ராகுல், பிரியங்கா மீது பீகார் நீதிமன்றம் வழக்கு பதிந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். குடியரசு தலைவரின் உரை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பீகார் மாநிலம் முசாபர்பூர் சிஜேஎம் நீதிமன்றத்தில் லஹ்லத்பூர் படாஹியில் வசிக்கும் வழக்கறிஞர் சுதிர் குமார் ஜா என்பவர் புகார் அளித்தார்.
அதில், ‘ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவமதித்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த பெண்ணான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து பேசியது, அவரது அவமதிக்கும் செயலாகும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இவரது மனுவை மாஜிஸ்திரேட் ஏற்றுக் கொண்டார். அதனால், பாரதிய நியாய சன்ஹிதா சட்டவிதிகள் 352,351 (2) (3) 79, புகார் பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கை வரும் 10ம் விசாரிக்க உள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது. முன்னதாக குடியரசுத் தலைவர் உரையை குறிப்பிட்டு பேட்டியளித்த சோனியா காந்தி, ‘குடியரசுத் தலைவரின் உரை மிகவும் சலிப்பாக இருந்தது. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். ஏழைப் பெண்ணான அவரால் பேச முடியவில்லை’ என்று கூறியதாக கூறப்படுகிறது. சோனியா அளித்த பேட்டியின் போது, ராகுல்காந்தியும், பிரியங்காவும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post குடியரசு தலைவர் உரை விமர்சன விவகாரம்; சோனியா, ராகுல் பிரியங்கா மீது வழக்கு: பீகார் நீதிமன்றம் நடவடிக்கை appeared first on Dinakaran.