சென்னை : குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது நடைமுறையான ஒன்று. வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் கொடுக்கவிருக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை.
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு!! appeared first on Dinakaran.