புதுடெல்லி: மகாகும்பமேளாவில் கூட்ட நெரிசலால் 30 பேர் பலியானது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உத்தரபிரதேச அரசின் நிர்வாக குளறுபடி, அலட்சியம், பாதுகாப்பு குறைபாடு ஆகியவற்றை சுட்டிகாட்டுகிறது. கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து உத்தரபிரதேச அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பக்தர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், “மகாகும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒன்றிய, மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து மாநிலங்களும் மகாகும்பமேளா பகுதியில் மையங்கள் அமைத்து, தங்கள் மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
* 30 பேர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து: உயிர் சேதம் இல்லை
மகாகும்ப நகர்: உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகாகும்பமேளாவுக்கு உலகம் முழுவதும் இருந்து வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக கங்கை கரையில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள செக்டார் 19 பகுதியில் கடந்த 19ம் தேதி இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து தீ ஏற்பட்ட தீ விபத்தில் 18 கூடாரங்கள் எரிந்து தீக்கிரையாகின. இதேபோல் கடந்த 20ம் தேதி செக்டார் 16ல் கின்னார் அகார முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று 3ம் முறையாக செக்டார் 22க்க அருகே உள்ள சமங்கஞ்ச் சவுகி அருகே நேற்று பிற்பகல் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத்துறையினர் வந்தனர். ஆனால் போதிய சாலை வசதிகள் இல்லாததால் வாகனங்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அடைய நீண்ட நேரமானது. அதற்குள் 15 கூடாரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்திலும் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
The post கும்பமேளா விபத்து குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.