திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசலை தடுக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒத்திகை நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் அதிகளவு பக்தர்கள் வருவதால் கூட்டநெரிசல் ஏற்படுவது மற்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பது வழக்கம். இதை தடுக்க ஏஐ தொழில்நுட்பம் கொண்டுவர தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதாவது விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கதவு திறப்பான் போன்று வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் நுழைவு பகுதியில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு உரியநேரத்தில் மட்டுமே அனுமதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எதிர்காலத்தில் பக்தர்கள் கூட்டம் ஒரேநேரத்தில் கூடுவதை தடுக்க அனைவருக்கும் கட்டாயம் நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்றிரவு திருமலையில் உள்ள அறங்காவலர் குழு தலைவர் முகாம் அலுவலகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பக்தர்கள் சோதனை முறையில் அனுமதிக்கும் ஒத்திகை நடந்தது. அப்போது டிக்கெட் பெற்ற பக்தர்கள் கோயிலுக்கு எவ்வாறு அனுமதிப்பது என செயல்விளக்கம் காட்டப்பட்டது. இதனை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, செயல் அலுவலர் ஷியாமளாராவ் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது ஏஐ தொழில்நட்பம் குறித்து பிரபல தனியார் நிறுவனத்தினர் செயல்விளக்கம் அளித்தனர். இதுதொடர்பாக இன்று மாலை அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதன் சாத்திய கூறுகள் குறித்து விவாதித்து விரைவில் இதனை அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது.
₹4.15 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 65,656 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 24,360 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ₹4.15 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 28 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசிக்கின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post கூட்ட நெரிசலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒத்திகை: விரைவில் அமல்படுத்த திட்டம் appeared first on Dinakaran.