ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா மாவட்டத்தில் கிஸ்தாராம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுக்மா மாவட்டத்தில் கிஸ்தாராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
முன்னதாக சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அட்டகாசம் ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் செல்வதற்கே அச்சப்படும் நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றும் வகையில் ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவோயிஸ்ட் படையினரின் முகாம்கள் பல அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாநிலத்தில் ஏற்பட்ட தனித்தனி மோதல்களில் 83 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை!! appeared first on Dinakaran.