*ஆணைய தலைவர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா தகவல்
சித்தூர் : எஸ்சி துணை சாதிகளின் வகைப்பாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா தலைமையில் நேற்று எஸ்சி வகைப்பாட்டு விசாரணை நடைபெற்றது. சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் சுமித் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் எஸ்சி வகைப்பாட்டை அமல்படுத்துவது குறித்து எஸ்சி வகுப்பைச் சேர்ந்த மக்களிடம் ஆலோசனை நடைபெற்றது. இதில் எஸ்சி வகுப்பை சேர்ந்த மக்கள் மற்றும் தலைவர்கள், பிரதிநிதிகள், மாதிககுல வகுப்பை சேர்ந்த மக்கள், தலைவர்கள், பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் எஸ்சி வகுப்பை சேர்ந்த மக்கள் எஸ்சி வகைப்பாட்டை பிரிக்கக்கூடாது, மாதிக மற்றும் எஸ்சி பிரிவை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். இதனை எதிர்த்து மாதிககுல மக்கள் கண்டனம் தெரிவித்து பேசுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளாக மாதிககுல வகைப்பாட்டை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தோம்.
தற்போது மத்திய அரசு எங்கள் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு அந்தந்த மாநிலத்தை சேர்ந்த எஸ்சி வகுப்பை சேர்ந்த மக்கள் அதில் இணைக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வகைப்பாட்டை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி ஆந்திர மாநிலம் முழுவதும் மாதிக குல வகுப்பை சேர்ந்த மக்களை எஸ்சி பிரிவில் இணைக்காமல் தனி பிரிவில் இணைக்க வேண்டும் என மாதிக குல மக்கள் கோரிக்கை வைக்கிறோம். ஏனென்றால் எஸ்சி பிரிவில் எங்களை இணைத்ததால் எங்கள் வகுப்பை சேர்ந்த மக்கள் அரசு பணிகளில் எந்த ஒரு சலுகையும் பெற முடியாத அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
ஆகவே மத்திய அரசு உத்தரவின் பேரில் எங்கள் வகுப்பை சேர்ந்த மக்களை எஸ்சி வகைப்பாட்டை அமல்படுத்தி தனி பிரிவில் சேர்த்து எங்களுக்கு நியாயம் செய்ய வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர்.
இதனால் எஸ்சி வகுப்பை சேர்ந்த மக்களுக்கும் மாதிக போல வகுப்பை சேர்ந்த மக்களுக்கும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து மிக விரைவில் மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து எஸ்சி வகைப்பாட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்சி வகைப்பாட்டு ஆணைய தலைவர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா தெரிவித்தார். இதில் மாவட்ட கலெக்டர் சுமித்குமார், மாவட்ட இணை கலெக்டர் வித்யா தாரி உள்பட ஏராளமான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் எஸ்சி வகைப்பாட்டை அமல்படுத்த அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் appeared first on Dinakaran.