புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் குறித்து பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் கேட்டு அட்டர்னி ஜெனரலுக்கு 2 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம் அனுப்பி உள்ளனர். ‘உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்’ என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா கூறியிருந்தனர். அவர்களது கருத்து பாஜகவின் கருத்து அல்ல என அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா கூறியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை விமர்சித்து பாஜகவை சேர்ந்த 2 எம்பிக்கள் கருத்து கூறினர். அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார். வெறுப்பு பேச்சு என்று எடுத்துக் கொண்டால், இந்த இரண்டு எம்பிக்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகின்றனர். சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இழிவாக பேசி வருகின்றனர்.
இந்தநிலையில் இதுகுறித்து ஜேபி நட்டாவின் கருத்து, வெறும் டேமேஜ் கன்ட்ரோல் தான். உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்து சொந்த கட்சி எம்பிக்கள் கருத்து குறித்து ஜேபி நட்டா மவுனம் காத்து வருகிறார். இரண்டு எம்பிக்களுக்கும் தொடர்ந்து அரசியலமைப்பை விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு இல்லையெனில் பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்? அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அவர்கள் இருவருக்கும் விளக்கம் கேட்டு ஜேபி நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளாரா?’ என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்காக ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியின் அலுவலகத்தில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சிவகுமார் திரிபாதி, அனஸ் தன்வீர் ஆகியோர் ஒப்புதல் கேட்டு கடிதம் அளித்துள்ளனர்.
அந்த கடிதத்தில், ‘நிஷிகாந்த் துபே பகிரங்கமாக பேசிய கருத்துகள் மிகவும் இழிவானவை; தவறாக வழிநடத்துபவை; உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் அதிகாரத்தையும் குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. அவரது கருத்தானது உள்நோக்கம் கொண்டது; உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் பிம்பத்தை களங்கப்படுத்தும் வகையில் உள்ளது. இத்தகைய கருத்துகள் மூலம், அவர் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்க முயல்கிறார்.
மேலும், நீதித்துறையின் நடுநிலைத்தன்மையில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார். அவரது இந்தச் செயல்கள், 1971ம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் பிரிவு 2(சி)(i) இன் கீழ் நீதிமன்ற அவமதிப்பாக வரையறுக்கப்படுகிறது. தலைமை நீதிபதிக்கு எதிரான கருத்தானது, மிகவும் இழிவானது மட்டுமின்றி ஆபத்தான சூழலை உருவாக்கும் வகையில் உள்ளது. தேசிய அமைதியின்மைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பொறுப்பாக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் செயல், உச்ச நீதிமன்ற நீதித்துறையை களங்கப்படுத்துவதற்கான முயற்சியாகும். பொதுமக்களிடையே அவநம்பிக்கை, ஆத்திரம் மற்றும் அமைதியின்மை உணர்வைத் தூண்டும் முயற்சியாக இருக்கிறது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், நீதித்துறையின் ஒருமைப்பாட்டையும் சுதந்திரத்தையும் தாக்குவதாக உள்ளது. எனவே, 1971ம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் உடனடியாகவும், முன்மாதிரியாகவும் சட்டப்பூர்வ விசாரணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
மீண்டும் சர்ச்சை கருத்து பதிவு
கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கண்ணாவையும் விமர்சித்திருந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, தற்போது முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியை ‘முஸ்லிம் ஆணையர்’ என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரேஷி வெளியிட்ட பதிவுக்கு கடுமையாக பதிலளித்த நிஷிகாந்த் துபே, அவரை ‘முஸ்லிம் ஆணையர்’ என்று சர்ச்சைக்குரிய கருத்தை குறிப்பிட்டதோடு, குரேஷியின் பதவிக்காலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் சந்தால் பர்கானா பகுதியில் வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு வாக்காளர் உரிமை வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
The post சுப்ரீம் கோர்ட் குறித்து பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் கேட்டு அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம்: 2 வழக்கறிஞர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.