புதுடெல்லி: மாநிலங்களவை முன்னாள் துணைத்தலைவரும், மணிப்பூர் மாநில முன்னாள் ஆளுநருமான மூத்த அரசியல் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா கடந்த 2004ம் ஆண்டு சோனியா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். அவர், ‘கட்சி எல்லைகளுக்கு அப்பால் ஜனநாயகத்தை பின்பற்றுதல்’ என்கிற சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், ஹெப்துல்லா கூறியிருப்பதாவது:
கடந்த 1999ம் ஆண்டில், பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சர்வதேச அமைப்பின் (ஐபியு) தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த சமயத்தில் பெர்லினில் இருந்தேன். இந்த விஷயத்தை முதலில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் தெரிவிக்க போன் செய்தேன். உடனடியாக அவர் பேசினார். ‘இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளீர்கள். அதுவும் இந்திய இஸ்லாமிய பெண்ணாக உங்களுக்கு கிடைத்த பதவி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தியாவுக்கு நீங்கள் திரும்பியதும், நாம் இதை கொண்டாடுவோம்’’ என்றார். அடுத்ததாக துணை ஜனாதிபதியிடம் விஷயத்தை சொன்னேன். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கு போன் செய்தேன். அவரது ஊழியர் போனை எடுத்து, ‘‘மேடம் பிஸியாக இருக்கிறார். காத்திருங்கள்’’ என்றார். நான் வெளிநாட்டில் இருந்து அழைப்பதாக கூறியும், அவர் காத்திருக்க சொன்னார். ஒரு மணி நேரம் போனில் காத்திருந்தேன்.
பிறகு சோனியாவிடம் பேசினேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு சோனியாவிடம் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இந்த சம்பவம் எனக்குள் நிராகரிப்பு உணர்வை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு, நியூயார்க்கில் நடந்த மிலேனியம் மாநாட்டில் கலந்து கொள்ள சோனியா காந்தியை அழைத்த போது, கடைசி நிமிடத்தில் வர முடியாது என கூறிவிட்டார். 1998ல் சோனியா காந்தி கட்சித் தலைவரான பிறகு, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கட்சித் தலைமையுடனான நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கட்சிக்காக அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இளம் நிர்வாகிகள், கட்சி தலைமையுடன் பேச முடியாமல் தடுத்தனர். இந்திரா காந்தியின் இல்லம் திறந்த புத்தகமாக இருந்தது. ஆனால், சோனியா வந்த பிறகு தகவல் தொடர்பில் முந்தைய காங்கிரஸ் கலாச்சாரம் முற்றிலும் மாறிப்போனது. இவ்வாறு கூறி உள்ளார்.
The post சோனியா காந்தி போனில் பேச 1 மணி நேரம் காக்க வைத்தார்: மூத்த அரசியல் தலைவர் ஹெப்துல்லா வேதனை appeared first on Dinakaran.