தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுடன், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக அவர் பொறுப்பேற்று, சுற்றுப்பயணங்கள் மேற்கொண்ட காலகட்டத்தில் எனக்கு அறிமுகம் கிட்டியது. என்றாலும், அவரது 45 ஆண்டுகால பொது வாழ்க்கைப் பயணத்தில், கடைசி 20 ஆண்டுகளில் அடிக்கடி சந்திக்கவும், நேரடியாகப் பலமுறை உரையாடவும் ‘சோ’ மூலம் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அரசியலில் ஈடுபடும் பெண்களில் பலர் அறிவுக் கூர்மையும், திறமையும் கொண்டவர்களாய் இருப்பினும், சுலபத்தில் அவர்களால் உயர் பொறுப்புகளுக்கு வரமுடிவதில்லை. அவச் சொற்களையும், அவதூறுகளையும் அரசியலுக்கு வரும் பெண்களில் பலர் எதிர்கொள்ள நேரிடுகிறது. திரைத்துறை புகழ் பின்னணி மட்டுமின்றி, எம்.ஜி.ஆரின் ஆதரவோடு அதிமுகவுக்கு அடியெடுத்து வைத்த ஜெயலலிதாவும் அத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது.