செயிண்ட் கிட்ஸில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியிலும் மேற்கு இந்தியத் தீவுகள் வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு இந்தியத் தீவுகள் வங்கதேசத்தை ஒருநாள் தொடரில் வீழ்த்தியுள்ளது.
டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தார். மேற்கு இந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் தனது ஒருநாள் கரியரில் ஆகச்சிறந்த பந்துவீச்சை வீசி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வங்கதேசம் 45.5 ஓவர்களில் 227 ரன்களுக்குச் சுருண்டது. மஹ்முதுல்லா அதிகபட்சமாக 62 ரன்களையும் தன்ஜித் ஹசன் 46 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 36.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளுக்கு 230 என்று அதிரடி வெற்றி பெற்றது. தொடக்க வீரர் பிராண்டன் கிங் 76 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 82 ரன்களை விளாசினார்.