ஆரோக்கியம், கட்டுரை, சுற்றுப்புறம்

இனிமை தரும் இயற்கை ஒளி

nature_2620225hஇயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளி இனிய இல்லத்துக்கு மிகவும் அவசியம். எவ்வளவு சூரிய ஒளி வீட்டுக்குள் வருகிறதோ அந்த அளவுக்கு நம்முடைய வீட்டுக்கு நல்லது. சூரிய ஒளி வீட்டுக்கு உள்ளே தங்கு தடையின்றி வருவதால் வெளிச்சம் கிடைப்பது ஒரு பயன் என்றால் நமது ஆரோக்கியத்துக்கும் அது உதவும் என்பது கூடுதல் பயன். ஏனெனில் சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது.

மேலும் போதுமான சூரிய ஒளி வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் அநாவசியமாகப் பகல் வேளைகளில்கூட மின்விளைக்கை எரியவிட்டு மின்சாரச் செலவைக் கூட்டிக்கொள்ள வேண்டாம். ஆனால் பலவேளைகளில் வீட்டுக்குள் ஒளிவருவதைத் தடுக்கும் வகையில் நாம் நடந்துகொள்கிறோம் நமது செயல்கள் அமைந்துவிடுகின்றன என்பதை உணர்ந்துகொண்டாலே போதும்.

அந்தத் தவறை நாம் சரிசெய்துவிடலாம். தேவையான அளவுக்கு ஒளியையும் பெற்றுக்கொண்டுவிடலாம். குகையில் வாழ்வதைப் போல் வீட்டுக்குள் வாழ்ந்தால் பகல் முழுவதும் விளக்கெரிய வேண்டியதிருக்கும் ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள் அதிக ஒளி வர என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக்குள் கண்ணாடிகளை அதிகமாக வைக்கலாம். இதன் மூலம் வீட்டுக்குள் வரும் சூரிய ஒளி பிரதிபலித்து வீட்டுக்கு அதிக இயற்கை ஒளி கிடைக்கும். சுவர்களில் எதிரெதிராக கண்ணாடிகளைத் தொங்கவிடலாம். கண்ணாடியிலான அறைக்கலன்களைப் பயன்படுத்தலாம். அறைக்கலன்கள் கண்ணாடியால் ஆனதாக இருக்கும்போது அதுவும் ஒளியைப் பிரதிபலிக்கும் ஆகவே வீட்டுக்குக் கிடைக்கும் வெளிச்சம் அதிகரிக்கும். கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றுக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தலாம்.

nature_2_2620226a

வீட்டின் சுவர்களுக்கு வண்ணமடிப்பதிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அடர்த்தியான நிறங்களைத் தவிர்த்துவிட வேண்டும். அடர் வண்ணங்கள் சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்காது. எனவே மென் நிறங்களையே வீட்டுச் சுவர்களுக்கு வண்ணங்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மென் நிறங்களைச் சுவர்களில் பூசும்போது அவை ஒளியை அதிகப்படியாகப் பிரதிபலித்து வீட்டின் இயற்கை ஒளியை ஏற்றித் தரும்.

வீடுகளின் பயன்பாட்டுக்காக நாம் போட்டுவைத்திருக்கும் அறைக்கலன்கள் சூரிய ஒளியை அடைப்பது போல் அமைந்துவிடக் கூடாது. பல வீடுகளில் கட்டில், பீரோ போன்றவற்றை ஜன்னலை அடைத்தது போல் போட்டுவிடுவார்கள். எனவே ஜன்னல்கள் வழியே உள்ளே புகும் சூரிய ஒளியை அவை தடுத்துவிடும். வீட்டுக்குக் கிடைக்க வேண்டிய இயல்பான ஒளியும் குறைந்துவிடும். கண்ணாடி அறைக்கலன்கள் பயன்படுத்தினால் இந்தத் தொல்லை இல்லை. இல்லாத பட்சத்தில் ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றை அடைக்காத வகையில் அறைக்கலன்களைச் சிறிது இடம்விட்டுப் போட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் சூரிய ஒளியைத் தடுக்கும் வகையில் அறைக்கலன்களைப் போடக் கூடாது என்பதைக் கவனமாகப் பின்பற்றுங்கள்.

நமக்கு எப்படி ஆடையைப் பார்த்துப் பார்த்து வாங்குவோமோ அப்படியே நமது பிரியத்துக்குரிய வீட்டுக்கும் கடை கடையாக அலைந்து திரிந்து அருமையான துணியை எடுத்து திரைச்சீலைகளைத் தைத்துப் போடுவோம். திரைச்சீலைகளும் சிலவேளைகளில் வீட்டுக்கு உள்ளே வரும் ஒளியைத் தடுத்துவிடும். மிகவும் அடர்த்தியான துணிகளில் திரைச்சீலைகளைத் தைத்துப் போட்டால் அவை வீட்டுக்குள் அதிக ஒளியை வர விடாது. ஆகவே ஒளி ஊடுருவும், மென்மையான துணியாலான திரைச்சீலைகளையே வீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

வீடுகளின் உள்ளே அடங்கிய அறைகளுக்கு மிகவும் தடிமனான கதவுகளைப் பொருத்தக் கூடாது. அப்படிப் பொருத்தினால் சிறிதுகூட வெளிச்சம் அந்த அறைக்குக் கிடைக்காது. கதவுகளிலேயே சிறிய திறப்புகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் நல்லது. இல்லையெனில் கண்ணாடிக் கதவை அங்கே பொருத்தலாம்.

இயற்கையாக நமக்குக் கிடைக்கும் ஒளியைப் பயன்படுத்தி வீட்டுக்குப் போதுமான வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இயற்கையான ஒளியைப் பயன்படுத்தினால் நமக்கும் நல்லது; சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அதுவும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் சூரிய ஒளியை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டுவருவதை மனதில் இருத்தி நம்மாலான முயற்சியைக் காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும்.

-தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *