பெங்களூரு: டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர் என மிரட்டி ரூ.11 கோடி பறிக்கப்பட்ட புகாரை விசாரிப்பதற்காக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் விஜயகுமார். பல வருடமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பரிமாற்றம் நடந்து வந்து உள்ளது. இந்நிலையில் அவரிடம் போனில் பேசிய மர்ம நபர்கள் தங்களை மும்பை கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரிகள் என அறிமுகம் செய்தனர். ரூ.6 கோடி பணப்பரிமாற்றம் விதிகளை மீறி செய்ததாக கூறி மும்பை கோலாபாத் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது என்று மிரட்டியுள்ளனர். மோசடி குறித்து வருமானவரி மற்றும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருவதாக கூறியுள்ளனர். அதன் பிறகு வழக்கம் போல் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி விஜயகுமாரின் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.11.83 கோடி பறித்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வடகிழக்கு மண்டல சைபர் போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயகுமாரிடம் பேசிய நபர்களின் செல்போன் சிக்னல் மற்றும் விபரங்களை தெரிந்து கொண்ட தனிப்படை போலீசார் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் சதிஷ்குமார் கூறியதாவது: போலீசார், சிபிஐ, வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதில்லை . அதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது என்பதை பலமுறை தெரிவித்து சைபர் குற்றவாளிகள் குறித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளோம். பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
The post டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டதாக கூறி பெங்களூரு இன்ஜினியரிடம் ரூ.11 கோடி பறிப்பு: மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.