டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வாக்களித்தனர். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என டெல்லியில் மும்முனை போட்டி நிலவுகிறது. 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. பாஜக 68 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜேடியு, எல்ஜேபி தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6.30 மணிக்கு நிறைவடையும் நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு மத்திய துணை ராணுவப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தற்போது வாக்களித்துள்ளார். நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியி அவர் ஜனநாயக கடமையாற்றினார். மேலும், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் வாக்களித்தார். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, டெல்லி காவல் துறை ஆணையர் சஞ்சய் அரோரா, டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர். ஆலிஸ் வாஸ், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அவரது மனைவி சங்கீதா சக்சேனா ஆகியோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
The post டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ராகுல் காந்தி, ஜெய்சங்கர்..!! appeared first on Dinakaran.