டெல்லி: திருச்சி விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகை விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் சென்னை, மதுரை, திருச்சி, திருப்பதி, ராஜமுந்திரி உள்பட 25 விமான நிலையங்கள் 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை காலகட்டத்தில் அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் குத்தகைக்கு விட ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தார். அதில்,
திருச்சி, அமிர்தஸரஸ், வாரணாசி, ராஜமந்திரி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் பொது-தனியார் (PPP) கூட்டாண்மை அடிப்படையில் குத்தகைக்கு விட அடையாளம் கண்டுள்ளதாக அவர் பதிலளித்தார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி விமான நிலையம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனியாரிடம் ஒப்படைப்பது என்பது பல்வேறு தரப்பினரிடையே பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.
The post திருச்சி விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகை விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல்..!! appeared first on Dinakaran.