திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை வாலிபர் சுத்தியலால் தலையில் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரின் தாய் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலைக்குப் பின்னர் வாலிபர் போலீசில் சரணடைந்தார். திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பேருமலை என்ற பகுதியை சேர்ந்தவர் முகம்மது. இவரது மனைவி ஷெமி. இவர்களுக்கு அஃபான் (23) அப்சான் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர். முகம்மது துபாயில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அஃபான் வேலை தேடி துபாய்க்கு சென்றிருந்தார்.
ஆனால் அங்கு வேலை கிடைக்காதால் அவர் சமீபத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த பர்சானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் அஃபான் வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்து, தான் 6 பேரை கொலை செய்ததாக கூறினார். அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரை கைது செய்து விசாரித்தனர்.இதில் அங்குள்ள பாங்கோடு பேருமலை மற்றும் சுள்ளால் ஆகிய இடங்களில் அவர் 6 பேரை கொடூரமாக தாக்கியது தெரியவந்தது. இதில் 5 பேரும் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அஃபான் தன்னுடைய காதலி பர்சானாவை கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை இவர் தன்னுடைய வீட்டில் வைத்து தாய் ஷெமி, காதலி பர்சானா மற்றும் தம்பி அப்சான் ஆகியோரை சுத்தியலால் சரமாரியாக அடித்துள்ளார். இதன் பின்னர் அருகிலுள்ள பாங்கோடு என்ற இடத்தில் வசிக்கும் தன்னுடைய பாட்டி சல்மா பீவியை (88) சுத்தியலால் தாக்கியுள்ளார். இதன்பிறகு அருகிலுள்ள சுள்ளால் பகுதிக்கு வந்து தன்னுடைய பெரியப்பா லத்தீப் (63) மற்றும் அவரது மனைவி ஷாகினா (53) ஆகியோரையும் சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அஃபானின் தாய் ஷெமி தவிர மற்ற 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஷெமி ஆபத்தான நிலையில் வெஞ்ஞாரமூட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தான் எலி விஷம் சாப்பிட்டதாக கொலையாளி அஃபான் போலீசிடம் கூறினார். இதையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கூடுதல் விவரங்களை போலீசாரால் சேகரிக்க முடியவில்லை. தன்னுடைய காதலியை உறவினர்கள் ஏற்க மறுத்தது தான் இந்த கொடூர கொலைகளுக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post திருவனந்தபுரத்தில் பயங்கரம் காதலி, தம்பி, பாட்டி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்துக் கொலை: வாலிபர் வெறிச்செயல்: தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.