பெங்களூரு: திரைப்பட விழாவில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொள்ளாத விவகாரத்தில், அவரை எம்எல்ஏ ஒருவர் விமர்சித்த நிலையில் நடிகைக்கு ஆதரவாக பழங்குடியின அமைப்பு ஒன்று அமித் ஷாக்கு கடிதம் எழுதியுள்ளது. கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களுருவில் சமீபத்தில் நடைபெற்ற பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சியில், அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், கன்னட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆனால் கடந்த 2016ல் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா (கனிகா) கூறுகையில், ‘ராஷ்மிகா மந்தனா தனது சினிமா வாழ்க்கையை, கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் கர்நாடகாவில் தொடங்கினார். பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளுமாறு அவரைக் கடந்த ஆண்டு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். `என் வீடு ஐதராபாத்தில் இருக்கிறது. கர்நாடகா எங்கே என்று எனக்குத் தெரியாது; எனக்கு நேரமில்லை. என்னால் வர முடியாது’ என்று அவர் கூறிவிட்டார். எனக்குத் தெரிந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், 10 முதல் 12 முறை அவரது வீட்டுக்குச் சென்று அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார். தன்னுடைய சினிமா வாழ்க்கையை இங்கு தொடங்கி வளர்ந்தபோதும், கன்னடத்தை அவர் புறக்கணித்துவிட்டார்.
அதற்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?’ என்று கூறினார். அதேபோல் கன்னட ஆர்வலர் டி.ஏ.நாராயண கவுடாவும் ராஷ்மிகா மந்தனாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இந்நிலையில் கோடவா தேசிய கவுன்சில் (சி.என்.சி) தலைவர் நாச்சப்பா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சட்டமன்ற உறுப்பினர் ஒருவரால் ராஷ்மிகா மந்தனா அச்சுறுத்தப்படுகிறார். கோடவா பழங்குடியினத்தை சேர்ந்த அவரை அச்சுறுத்துவது, எங்களது சமூகத்தையே அச்சுறுத்துவது போன்றதாகும். தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் சினிமாத் துறையில் ராஷ்மிகா மந்தனா வெற்றி பெற்றுள்ளார்.
அமிதாப் பச்சன், சல்மான் கான் போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். எனவே மாநில அரசு ராஷ்மிகாவிற்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். காவிரி நதியை பெரிதும் நம்பியுள்ள மண்டியா மக்களுக்கும், அன்னை காவிரியின் அன்பு மகளுமான ராஷ்மிகா மந்தனாவை சிறுமைப்படுத்த வேண்டாம். அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, கோடவாலாந்து மக்களையும், காவிரிப் பகுதி மக்களின் கண்ணியத்தை அவமதிப்பதாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
The post திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாத விவகாரம்; நடிகை ராஷ்மிகாவுக்கு பழங்குடியின அமைப்பு ஆதரவு: எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க அமித் ஷாக்கு கடிதம் appeared first on Dinakaran.