காஷ்மீர்: தீவிரவாதிகளுக்கு உதவியதாக கூறப்படும் இளைஞர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்ற போது பலியானதால் ஜம்மு – காஷ்மீரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் கடந்த 12 நாட்களாக எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், பதுங்கு குழிகளிலும் தங்கியுள்ளனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இம்தியாஸ் அகமது மக்ரே (23) என்ற இளைஞர், பாதுகாப்புப் படைகளிடமிருந்து தப்பிக்க முயன்றபோது வேஷவ் ஆற்றில் குதித்து உயிரிழந்தார்.
முன்னதாக நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்ட இவர், குல்காமின் தங்மார்க் காட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கு உதவியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் தீவிரவாதிகளின் மறைவிடத்திற்கு பாதுகாப்புப் படைகளை அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார். ஆனால், தீவிரவாதிகளின் மறைவிடத்திற்கு அருகில் சென்றபோது, திடீரென அவர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் ஆற்றின் நீரோட்டம் வேகமாக இருந்ததால், அந்த இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவர் நீரில் மூழ்கியது கேமராவில் பதிவாகியது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவரது உடல் ஆர்பால் பகுதியில் மீட்கப்பட்டது.
இந்நிலையில் இளைஞர் மக்ரேயின் மரணம் குறித்து, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி அளித்த பேட்டியில், ‘இளைஞரின் மரணம் சந்தேகத்திற்குரியது; அவர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துள்ளார்’ என்று கூறினார். இருப்பினும், பாதுகாப்புப் படைகள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, இளைஞர் மக்ரே தப்பிக்க முயன்றபோது அவருடன் எந்த உடல் ரீதியான தொடர்பும் இல்லை என்றும், தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தன. ஜம்மு-காஷ்மீர் அரசு இந்த மரணம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
The post தீவிரவாதிகளுக்கு உதவியதாக கூறப்படும் இளைஞர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்ற போது பலி: ஜம்மு – காஷ்மீரில் பரபரப்பு appeared first on Dinakaran.