திருவனந்தபுரம்: தீவிரவாதிகள், சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் உதவி செய்து வந்த அமெரிக்க போலீசால் தேடப்பட்டு வந்த லித்வேனியா நாட்டைச் சேர்ந்தவர் வர்க்கலாவில் கைது செய்யப்பட்டார். லித்வேனியா நாட்டைச் சேர்ந்த அலெக்சேஜ் பெசியோகோவ் (46) மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிராசெர்தா (40) ஆகிய இருவரும் சேர்ந்து அமெரிக்காவில் காரன்டக்ஸ் என்ற பெயரில் ஒரு கிரிப்டோ கரன்சி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு இந்த நிறுவனத்தை இவர்கள் இருவரும் சேர்ந்து தொடங்கினர். இந்நிலையில் தீவிரவாதிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளிகள் இந்த நிறுவனத்தில் பெருமளவு கருப்புப் பணத்தை முதலீடு செய்தது தெரியவந்தது. இதன்மூலம் இவர்கள் இருவருக்கும் பல லட்சம் அமெரிக்க டாலர்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் மீது அமெரிக்க போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைதுக்கு பயந்து இவர்கள் இருவரும் குடும்பத்துடன் தலைமறைவானார்கள். இதையடுத்து அமெரிக்க நீதிமன்றம் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.
இந்நிலையில் அலெக்சேஜ் பெசியகோவ் தன்னுடைய குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை கைது செய்ய உதவும்படி அமெரிக்கா மற்றும் சர்வதேச போலீஸ் சார்பில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து சிபிஐ இவரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் தேடிவந்தது.
இந்நிலையில் அலெக்சேஜ் பெசியகோவ் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் குடும்பத்துடன் தங்கியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிபிஐ கேரள போலீசுக்கு தகவல் கொடுத்தது. கேரள போலீசார் விரைந்து செயல்பட்டு வர்க்கலாவில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த அலெக்சேஜ் பெசியகோவை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே இவரது கூட்டாளியான அலெக்சாண்டர் மிராசெர்தா ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவரையும் கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
The post தீவிரவாதிகளுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் உதவி அமெரிக்காவால் தேடப்பட்டவர் கேரளாவில் கைது appeared first on Dinakaran.