சண்டிகர்: ஒன்றிய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உறவுகளை இழந்த குடும்பத்தினர் நன்றியும், மகிழ்ச்சியும் வௌிப்படுத்தி உள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பற்றி தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் தாயார் ஆஷா நர்வால் கூறுகையில், “பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஒன்றிய அரசு தகுந்த பதிலடி தந்துள்ளது பாராட்டத்தக்க, நல்ல விஷயம். எங்கள் குடும்பமும், அனைத்து மக்களும் ஒன்றிய அரசுடன் இருக்கிறார்கள்.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தகுந்த நீதி கிடைத்துள்ளது. மீண்டும் இதுபோன்ற தீவிரவாத சம்பவங்கள் நடக்காமல் இருக்க தகுந்த பதிலடி தரப்பட வேண்டும்” என்றார். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுஷில் நதானியேலின் மனைவி ஜெனிபர் கூறும்போது, “ஒரு மிருகம் கூட செய்ய நினைக்காத தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அழிக்கப்பட வேண்டும்” என ஆவேசமாக தெரிவித்தார்.
* ‘என் தந்தையின் ஆன்மா சாந்தியடையும்’
பஹல்காம் தாக்குதலில் சஞ்சய் லெலெ மற்றும் அவரது உறவினர்கள் ஆதல் மோன், ஹேமந்த் ஜோஷி ஆகியோர் கொல்லப்பட்டனர். இதில் சஞ்சய் லெலெவின் மகன் ஹர்ஷல் லெலெ, “ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போதுதான் என் தந்தை நிம்மதியாக இருப்பார். தீவிரவாதிகளுக்கு எதிரான இதுபோன்ற பதிலடி தொடர வேண்டும்” என தெரிவித்தார்.
இதேபோல் அதுல் மோனின் மனைவி அனுஷ்கா மோன், “எங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. நாங்கள் இழந்த யாரும் திரும்பி வர மாட்டார்கள். ஆனால் இந்திய ராணுவத்தின் பதிலடி சக்தி வாய்ந்த பதிலடி. பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு உண்மையான அஞ்சலி. இந்தியாவின் ஆன்மாவை தாக்கிய தீவிரவாதிகளுக்கு இந்தியா சிறந்த பதில் தந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் அரசியலாக்கப்பட கூடாது. இது தேச பாதுகாப்பு, கண்ணியம் சம்பந்தப்பட்ட விஷயம். நீதியை பற்றியது” என்றார்.
* ‘இதுதான் உண்மையான அஞ்சலி’
பஹல்காம் தாக்குதலில் கழுத்தில் காயமடைந்த நவி மும்பையை சேர்ந்த சுபோத் பாட்டீல், “இந்தியா பழி வாங்கியது நல்ல செய்தி. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இதுதான் அஞ்சலி” என தெரிவித்தார்.
The post தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது: பஹல்காமில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் பேட்டி appeared first on Dinakaran.