சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு வருடத்திற்கு தினந்தோறும் காலையில் ‘அன்னம் தரும் அமுதகரங்கள்’ என்ற பெயரில் காலை உணவு தரும் திட்டத்தை நேற்று முன்தினம் துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், ஜிகேஎம் காலனி 69வது வட்டம் மற்றும் 64 (அ) வட்டத்தில் அன்னம் தரும் அமுதகரங்கள் 2வது நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு, ஏழை, எளிய பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார். இதில், மேயர் பிரியா, மாமன்ற உறுப்பினர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர் ஏ.நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அமுதகரங்கள் என்ற தலைப்பில் 365 நாட்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. காலை சிற்றுண்டி வழங்கும் இடத்தை ஒரு நாள் முன்கூட்டியே அந்த பகுதியில் தெரிவித்துவிடுவதால், பொதுமக்கள் சிற்றுண்டியை பெற்று மகிழ்ச்சியடைகிறார்கள்.
அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற செங்கற்களை ஒவ்வொன்றாக பிடுங்கும் பணி நிறைவடையும் வரை நான் ஓயமாட்டேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். இப்போதும் சொல்கிறோம், தெம்பு இருந்தால், திராணி இருந்தால், தைரியம் இருந்தால் அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கலையாவது அவர் தொட்டுப் பார்க்கட்டும்.
திமுக நெருப்பாற்றில் பயணித்த இயக்கம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. 75 ஆண்டுகளை கடந்து திராவிட மாடல் ஆட்சியை ஏற்படுத்தி இருக்கிற முதல்வர் தலைமையில் இருக்கும் இயக்கம். மிசா என்ற கொடுஞ்சிறையில் கொள்கைக்காக சிறையில் இருந்தவர். அவர் வழி வருகிற லட்சோப லட்சம் தொண்டர்கள் இருக்கிறவரை ஓர் அண்ணாமலை அல்ல, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் அறிவாலயத்தில் ஒரு செங்கல்லையாவது அண்ணாமலை தொட்டு பார்க்கட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால் appeared first on Dinakaran.