திருமலை: தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம், டோமலபென்டா அருகே ஸ்ரீசைலம் அணையின் இடது கரையில் கால்வாய் தோண்டும் பணிகள் ரூ.4,637 கோடி செலவில் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக அங்குள்ள மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணி உள்ளிட்டவை நடந்து வருகிறது. சுமார் 44 கிமீ நீள சுரங்கப்பாதை பணியில் எஞ்சியுள்ள 9.559 கிமீ சுரங்கம் அமைக்கும் பணி தற்போது இரவு, பகலாக விறுவிறுப்புடன் நடந்து வந்தது.
இந்நிலையில் நல்கொண்டா மாவட்டத்தில் இப்பணியில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென சுரங்கப்பாதையில் மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 40 ஊழியர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கினர். சில மணி நேரங்களில் 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கி கொண்டனர். இரண்டாம் நாளான இன்றும் (நேற்று) மீட்புப் பணி நடந்து வருகிறது.
மீட்புப் பணிகள் குறித்து என்டிஆர்எப் துணை கமாண்டன்ட் சுகேந்து தத்தா கூறியதாவது: என்ஜின்கள், பம்பிங் செட்கள், கவசக் குழாய்கள் மற்றும் கன்வேயர் பெல்ட்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை செய்து வருகிறோம். இதில், இறுதியாக சுமார் 2 கிமீ தூரம் கன்வேயர் பெல்ட் மற்றும் நடைப்பயணம் மூலம் கடந்து வீரர்கள் உள்ளே சென்றுள்ளனர். கடைசி 200 மீட்டர் முழுவதும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனால், மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு வீரர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிய ஊழியர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், யாரும் பதிலளிக்கவில்லை. எனவே சுரங்கப்பாதை இடிந்து விழுந்த மண் குவியல், கற்களை டன்னல் போரிங் மெஷின் மூலம் அகற்றி சிக்கிய ஊழியர்கள் உயிருடன் இருக்கின்றனரா? என தேட வேண்டும். தற்போது சுரங்கப்பாதைக்குள் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அது முடிந்ததும் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகளை தொடங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post தெலங்கானாவில் பாசன கால்வாய்க்கு தோண்டிய சுரங்க மண் சரிவில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி 2வது நாளாக தீவிரம்: தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.