திருமலை: தெலங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆந்திர மாநில உளவு துறை டிஎஸ்பிக்கள் 2பேர் பரிதாபமாக பலியாகினர். தெலங்கானா மாநிலம், யாதாத்ரி மாவட்டம், சவுட்டுப்பல் மண்டலத்தில் உள்ள கைதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் எதிர்திசையில் சென்று, விஜயவாடா நோக்கி சென்ற லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த 2பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சவுட்டுப்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த 2பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரில் சிக்கியிருந்த 2பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விபத்தில் சிக்கி பலியானது ஆந்திர மாநில உளவுத்துறையில் பணி புரிந்து வந்த டிஎஸ்பிக்கள் சக்ரதர் ராவ், சாந்தராவ் என்பதும், படுகாயம் அடைந்தவர்கள் கூடுதல் எஸ்.பி. பிரசாத், டிரைவர் நர்சிங் ராவ் என்பதும் தெரிய வந்தது.
மேலும் பணி நிமித்தம் காரணமாக சென்றபோது போலீசாரின் கார், முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது தடுப்புச்சுவரில் மோதி பின்னர் எதிர்திசையில் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர மாநில போக்குவரத்து அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி, டிஎஸ்பிக்கள் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார்.
The post தெலங்கானாவில் விபத்து 2 உளவுத்துறை டிஎஸ்பிக்கள் பலி: கூடுதல் எஸ்பி, டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.