திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை ஹனிரோசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைதான கேரளாவை சேர்ந்த நகைக்கடை அதிபரான பாபி செம்மண்ணூருக்கு கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அவர் நேற்று தான் வெளியே வந்தார். சிறை வாசலில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க முடியாமல் கைதான பலர் என்னுடன் சிறையில் இருந்தனர். ஜாமீன் கிடைத்தும் பணம் கட்ட முடியாததால் அவர்களால் வெளியே வர முடியாமல் உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவுவதற்காகத் தான் மேலும் ஒரு நாள் நான் சிறையில் இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து போபி செம்மண்ணூர் மீது கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குஞ்சி கிருஷ்ணன் கூறியதாவது: சிறையிலிருந்து அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரட்டும். அதைப் பற்றி நீதிமன்றத்திற்கு கவலை இல்லை. ஆனால் கைதிகளுக்கு உதவுவதற்காகத் தான் சிறையில் இருந்தேன் என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் ஒரு வியாபாரி, வியாபாரத்தை அவர் கவனித்துக் கொள்ளட்டும். கைதிகளின் நலனை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும். அவர் விளம்பரம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில் முதற்கட்ட விசாரணையில் அவர் குற்றம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தேவைப்பட்டால் அவரது ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க முடியும். அவர் செய்த செயலுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு நீதிபதி குஞ்சி கிருஷ்ணன் கூறினார். இதை தொடர்ந்து அவரது சார்பில் உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.
The post நடிகை ஹனிரோசுக்கு எதிரான ஆபாச புகாரில் கைதானவர் ஜாமீன் கிடைத்தும் வெளியே வர மறுப்பு: பாபி செம்மண்ணூருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.