புதுடெல்லி: நாடு முழுவதும் வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. புதிதாக நகைக்கடன் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இது கடும் பொருளாதார நெருக்கடி உருவாகி இருப்பதை காட்டுவதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள் அடிப்படையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி உருவாக்கிய நெருக்கடியால் இந்திய பொருளாதாரம் சிக்கித்தவிக்கிறது. நாடு முழுவதும் தங்க நகைக்கடன் வாங்குவது உயர்ந்துள்ளது. தொடர்ச்சியான பொருளாதார தேக்கநிலை காரணமாக வெறும் 5 ஆண்டுகளில் தங்கத்தின் மீதான கடன்கள் கடந்த 2024ல் 300% வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது முதன்முறையாக ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
குறிப்பாக இந்தியாவின் பெண்களுக்கு மோசமான செய்திகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. ஏனெனில் 2025 பிப்ரவரியில் மட்டும் தங்கம் வைத்து கடன் பெறுவது 71.3% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், சிபில்-நிதி ஆயோக் அறிக்கை, பெண்களுக்கு வழங்கப்படும் தங்க நகைக் கடன்கள் மட்டும் மொத்தக் கடன்களில் கிட்டத்தட்ட 40% என்று காட்டியுள்ளது. மேலும் தங்களுடைய நகைகளை வைத்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 22 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் மோடி அரசு தனது முழுமையான திறமையின்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதற்கான விலையை இந்தியாவில் உள்ள பெண்கள் கொடுக்கிறார்கள். ஏனெனில் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள தங்கத்தின் விலை உயர்வு மற்றும் கடனில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக வங்கிகளின் தங்கக் கடன் 71.3 சதவீதம் உயர்ந்து, ரூ.1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் 2019 முதல் 2024 வரை ஆண்டுதோறும் 22% பெண்கள் தங்க நகையை வைத்து கடன் வாங்குபவர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். தங்க நகைகளை வைத்து புதிதாக 4 கோடி பெண்கள், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 4.7 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
* கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 4 கோடி பெண்கள் தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர்.
* கடந்த ஆண்டு மட்டும் தங்கத்தை அடகு வைத்து ரூ.1 லட்சம் கோடி நகைக்கடன் பெறப்பட்டுள்ளது.
* தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவது 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
* பாஜவின் இரட்டை இன்ஜின் அரசுகள் பெண்களுக்கு சாபக்கேடு
மகாராஷ்டிராவில் ஒன்றிய அமைச்சரின் மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், நாட்டில் பாஜவின் இரட்டை இன்ஜின் அரசுகள் பெண்களுக்கு சாபமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா கூறுகையில்,’ மகாராஷ்டிராவில் ஒன்றிய அமைச்சரின் மகள் மற்றும் அவரது தோழிகள் துன்புறுத்தப்பட்ட வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் சிக்கியவர் முன்னாள் பாஜ கவுன்சிலர் பியூஷ் மோர் என்பதும் தெரியவந்தது.
மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் பிற பாஜ தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. ஒன்றிய அமைச்சருக்கு நீதி கிடைக்காவிட்டால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இதுபோன்ற பல மகள்களுடன் சேர்ந்து தனது மகளின் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இதே போல் புனேவில் கத்தி முனையில் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சம்பவத்தின் வீடியோ எடுக்கப்பட்டது.ஆனால் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குஜராத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 17,000 மகள்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த ஆறு மாதங்களில், ராஜஸ்தானில் 20,000 பெண்கள் துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் சுமார் 200 மகள்கள் நீதிக்காக காவல் நிலையத்திற்கு வருகிறார்கள். அரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பா.ஜவின் இரட்டை இன்ஜின் அரசுகள் பெண்களுக்கு சாபக்கேடாக உள்ளன ’ என்றார்.
The post நாடு முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடி ரூ.4.70 லட்சம் கோடிக்கு நகைகளை அடகு வைத்த 4 கோடி பெண்கள்: ஆதாரத்துடன் காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.