டெல்லி : நாட்டு மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தது தான் பாஜக அரசின் பொருளாதார சாதனையாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய பங்குச் சந்தை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த 5 மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் நகை கடன் வழங்க போதிய நிதி ஒதுக்கப்படாததால், முழு தொகையையும் செலுத்தி, நகையை திரும்பப்பெற வலியுறுத்தப்படுகிறது.
வங்கிகளின் இந்த புதிய நடைமுறை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே வெளியிட்டுள்ள செய்தியில், பொருளாதார வளர்ச்சியில் வறுமை, மந்தநிலை, திவால் ஆகியவை தான் ஒன்றிய பாஜக அரசின் பெரும் சாதனையாக உள்ளது என விமர்சித்துள்ளார். வங்கிகளில் பெண்கள் வாங்கிய கடனில் 38% ஆக இருந்த நகைக்கடன் அளவு தற்போது ஒரே ஆண்டில் 71.3% ஆக உயர்ந்துவிட்டதாகவும் காங்கிரஸ் தலைவர் கார்கே சுட்டிக் காட்டியுள்ளார். பெண்களின் தாலி உள்ளிட்ட தங்கத்தை பறித்துவிடுவார்கள் என்று பாஜக பேசியது அவர்களின் ஆட்சியிலேயே உண்மை ஆகிவிட்டதாகவும் தற்போது அனைத்து நகைகளையும் அடகு வைக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் இரு சக்கர வாகனம் வாங்க கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறி வருவதாகவும் கடந்த 2024 செப்டம்பர் மாத நிலவரப்படி, திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகையில், 40,000 கோடி ரூபாய் அதிகரித்து மொத்த வாகன கடன் 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
The post நாட்டு மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தது தான் பாஜக அரசின் பொருளாதார சாதனை : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டம் appeared first on Dinakaran.