புதுடெல்லி: ‘‘நீண்ட நேரம் வேலை செய்வது முக்கியமில்லை, அதன் தரமும் முக்கியம் என்பதால், உங்கள் உடம்பு சொல்வதை கேளுங்கள். போதுமான ஓய்வும், தூக்கமும் அவசியம்’’ என்கிறார் பிரபல விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்.
இந்தியா வல்லரசாக இளைஞர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டுமென்ற கருத்துகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் ஞாயிற்றுகிழமை உட்பட வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய கூறியது நாடு முழுவதும் பெரும் விவாதமானது. அதைத் தொடர்ந்து, இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்றார்.
இது குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநருமான சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:
கடினமாக உழைக்கும் பலரை நான் அறிவேன். இது தனிப்பட்ட விஷயம் என நினைக்கிறேன். சோர்வு மூலம் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்பதை உடல் உங்களுக்கு உணர்த்தும். எனவே நீங்கள் உங்கள் உடம்பு சொல்வதை கேளுங்கள். நீண்ட நேரம் வேலை செய்யலாம். ஆனால் சில மாதங்கள் தான் அப்படி செய்ய முடியும். அதையே வாழ்நாள் முழுவதும் முடியாது. கொரோனா காலகட்டத்தில் சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பலரும் பல மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்தார்கள். சிலர் 24 மணி நேரமும் பணியாற்றினர். அதையே இப்போதும் செய்வது முடியாதது.
மனித உடலுக்கு தூக்கம் அவசியம். மன ரீதியாகவும் நீங்கள் சமநிலையில் இருக்க போதுமான ஓய்வு தேவை. போதுமான அளவு ஒவ்வொருவரின் உடம்புக்கு ஏற்ப மாறுபடும். ஒரு வேலையானது எவ்வளவு நேரம் செய்தோம் என்ற எண்ணிக்கையில் மட்டுமல்ல அதன் தரமும் முக்கியம். 12 மணி நேரம் வேலை செய்தாலும், 8 மணி நேரத்திற்கு பிறகு செய்யும் விஷயங்கள் தரமாக இருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post நீண்ட நேர வேலை தரத்தை குறைக்கும்; உடம்பு சொல்வதை கேளுங்கள் ஓய்வு, தூக்கம் மிகவும் அவசியம்: பிரபல விஞ்ஞானி சவுமியா கருத்து appeared first on Dinakaran.