ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் நகரின் பைசாரன் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு; ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பது, காயமடைந்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் டிரம் வெளியிட்ட எக்ஸ் பதிவு; இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் அமெரிக்காவின் முழு ஆதரவு உண்டு. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், காயம் அடைந்தவர்கள் மீண்டு வரவும் பிரார்த்திக்கிறோம் என்றார். இதையடுத்து காஷ்மீரில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதலுக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட எக்ஸ் பதிவு; இந்த சம்பவம் எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம். அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்திய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு ரஷியா உறுதி பூண்டுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் துயர விளைவுகளுக்கு உண்மையான இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இத்தாலி பிரதமர் மெலோனி எக்ஸ் பதிவு; பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்கள், காயமடைந்தவர்கள், அரசாங்கம் மற்றும் முழு இந்திய மக்களுக்கும் எனது ஒற்றுமையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
The post பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட உலக தலைவர்கள் கண்டனம்! appeared first on Dinakaran.