மும்பை: பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை அதிகமாக காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவக்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றங்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் 2023ம் ஆண்டு குற்றம் சாட்டியது. இதனை செபி விசாரணை நடத்தி வந்தது. அப்போது செபி தலைவராக இருந்தவர் மாதபி புரி புச். இதைத் தொடர்ந்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், அதானி குழுமம் முறைகேட்டுக்கு பயன்படுத்திய நிறுவனங்களில் மாதபி மற்றும் அவரது கணவர் தாவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியது.
இந்நிலையில் மாதபி புரி புச் கடந்த மாதம் 28ம் தேதி ஓய்வு பெற்றார்.இதனிடையே, செபி சட்ட விதிகளை மீறி மோசடியாக நிறுவனங்களை பங்குச்சந்தையில் பட்டியலிட்டது, செபி விதிகளை பூர்த்தி செய்யாத நிறுவனங்களை பட்டியலிட உதவியதன் மூலம் முறைகேடுக்கு வழி வகுத்தது தொடர்பாக மாதபி உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி சசிகாந்த் ஏக்நாத்ராவ் பங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் ஒழுங்குமுறை விதிகள் மீறல், கூட்டு சதி நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை காட்டுவதாக உள்ளது. எனவே, இதுதொடர்பாக நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை தேவை. மேலும் இது ெதாடர்பாக செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச், மும்பை பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி, மும்பை பங்குச்சந்தையின் அப்போதைய தலைவர் பிரமோத் அகர்வால் மற்றும் செபியின் முழுநேர உறுப்பினர்கள் அஸ்வனி பாட்டியா, ஆனந்த் நாராயண், கம்லேஷ் சந்திர வர்ஷிணி ஆகியோர் மீது ஊழல் தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை கோர்ட் கண்காணிக்கும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
The post பங்குச்சந்தை முறைகேடு செபி முன்னாள் தலைவர் மாதபி மீது வழக்கு பதிய வேண்டும்: ஊழல் தடுப்பு பிரிவுக்கு மும்பை சிறப்பு கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.