பொன்னேரி: பழவேற்காட்டில் வரலாற்று பிரசித்தி பெற்ற மிகப் பழமையான புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547ம் ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவை சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாாமி கொடியேற்றி துவக்கி வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காட்டில் வரலாற்று பிரசித்திப் பெற்ற மிகப் பழமையான புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547ம் ஆண்டு பெருவிழா நிகழ்ச்சிகள் நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக, புனித மகிமை மாதாவின் திருக்கொடி அர்ப்பணிப்பு திருப்பணி முடிந்து, பழவேற்காடு கடற்கரை மற்றும் முகத்துவாரம் வரை படகில் கொடி பவனி வந்து, தேவாலயம் அமைந்துள்ள பழவேற்காடு பகுதியின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. பின்னர் பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல அதிபரும் பங்கு தந்தையுமான கே.ஜெ.வர்கீஸ் ரொசாரியோ தலைமையில், திருத்தல கொடிமரத்தில் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி மந்திரித்து, கொடி பாடல் முழங்க கொடியேற்றி துவக்கி வைத்தார்.
அதன்பின், ‘ஊர் சமாதானத்துக்காக மன்றாடுவோம்’ எனும் தலைப்பில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, தற்போது இத்திருத்தலத்தின் 547ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு திருப்பலி நடைபெற்று, வரும் மே 3ம் மற்றும் 4ம் தேதிகளில் அன்னையின் ஆடம்பர தேர் திருவிழா நடைபெறும்.
கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபைகளின் தலைவர் மறைந்த போப்பாண்டவர் எப்போதும் கூறும் உலக அமைதி மற்றும் உலக மக்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். சகோதர வாஞ்சையுடன், நீதி நேர்மையுடன் இருக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், இந்த ஆடம்பர திருவிழாவில் மகிழ்ச்சி நிலவட்டும் என்று தெரிவித்தார். இதில் பழவேற்காடு சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post பழவேற்காடு மகிமை மாதா ஆலய 547ம் ஆண்டு விழா தொடக்கம் appeared first on Dinakaran.