புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, இதுவரை மூன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் (மழைக்காலக் கூட்டத்தொடர் 2024, குளிர்காலக் கூட்டத்தொடர் 2024, ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் 2025) நடைபெற்றுள்ளன. இந்தக் கூட்டத்தொடர்கள் முக்கிய சீர்திருத்தங்களால் மட்டுமல்லாமல், அனல் பறந்த விவாதங்கள் மற்றும் கடுமையான அமளிகளாலும் நிறைந்திருந்தன. 2024ம் ஆண்டின் மழைக்காலக் கூட்டத்தொடரில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி ஆட்சியில் 12.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் கூறி, ஒன்றிய அரசின் பொருளாதாரச் செயல்பாடுகளை வலுவாக ஆதரித்துப் பேசினார்.
ஆனால், எதிர்க்கட்சிகள்,’’இந்த பட்ஜெட் ஆட்சியை காப்பாற்றும் பட்ஜெட்’’ என்று கடுமையாக விமர்சித்தன. கடந்த 2024 குளிர்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்னைகளால் அவையை முடக்கியதாகக் கூறி, சுமார் 140க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் எம்பிக்கள் சஸ்பெண்ட் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்பட்ட நிலையில், கடும் அமளிகளுக்கு மத்தியிலும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான இரண்டு முக்கிய மசோதாக்களை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது.
அதன்பின் 2025ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. இதில், நடுத்தர வர்க்கத்தினருக்கான பெரும் வரிச் சலுகைகளுடன் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. புதிய வரி விதிப்பின் கீழ், ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், 200 புதிய வந்தே பாரத் ரயில்கள், விவசாயிகளுக்கான ‘பிஎம் தன்-தான்ய கிருஷி யோஜனா’ மற்றும் பெண்களுக்கான ‘லட்சாதிபதி சகோதரி’ திட்டம் போன்ற முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. இருப்பினும், இந்த கூட்டத் தொடரின் உச்சக்கட்டமாக வக்ஃப் (திருத்த) மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த பரபரப்பான கடந்த கால நிகழ்வுகளைத்தொடர்ந்து, அடுத்த மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 21) முதல் வரும் ஆகஸ்ட் 21 வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதத் தளங்கள் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை விசயத்தில், சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் ஒன்றிய அரசு சிறப்பு கூட்டத்தை கூட்ட மறுத்துவிட்டது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கூடும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இது என்பதால், தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆளும் பாஜக கூட்டணி அரசை அவையில் முற்றுகையிடுவதற்கான வியூகங்களை வகுக்க ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் நேற்று ஆன்லைன் மூலம் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நீண்ட விவாதத்திற்குப் பிறகு, மழைக்காலக்
கூட்டத்தொடரில் அரசை நோக்கி எழுப்ப வேண்டிய 7 முக்கிய பிரச்னைகளை இறுதி செய்தனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி, ‘பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை இதுவரை ஏன் கைது செய்யவில்லை? என்பது குறித்தும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்தும், இவ்விசயத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, டிரம்பின் குற்றச்சாட்டு மீதான விவாதத்தின்போது பிரதமர் அவையில் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன. பீகார் பேரவை தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் வாக்காளர் பட்டியல் திருத்தம், எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு, காசா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, தலித்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வது, 241 பேர் பலியான அகமதாபாத் விமான விபத்தில் உள்ள மர்மங்கள் குறித்தும் ஒன்றிய அரசை நோக்கி சரமாரியாகக் கேள்வி எழுப்ப முடிவு செய்யப்பட்டது’ என்றார்.
பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இந்தியா கூட்டணித் தலைவர்கள், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ‘பஹல்காம் தாக்குதல் உளவுத்துறை தோல்வி என்றால், உளவுத்துறை தலைவருக்கு ஏன் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது? பெகாசஸ் மென்பொருள் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படாமல் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எதிர்கட்சிகளின் மேற்கண்ட விவகாரங்களால், பரபரப்பான சூழலில் நாளை தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடர் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் வருமான வரி மசோதா – 2025 உள்ளிட்ட 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக, ஒன்றிய அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு ஒன்றிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒன்றிய அரசு தரப்பில் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யவும், நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய மசோதாக்கள் குறித்த பட்டியல் எதிர்க்கட்சிகளிடம் வழங்கப்பட்டது. அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை ஒன்றிய அரசு கோரியது. மறுபுறம், ‘இந்தியா’ கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க போதுமான நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. எனவே நாளை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீதிபதி பதவி பறிக்கப்படுமா?
நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரின் போது, நிலுவையில் உள்ள 7 மசோதாக்களுடன், 8 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த பட்டியலில், தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, புவி பாரம்பரிய தளங்கள் மற்றும் புவி சின்னங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு (திருத்த) மசோதா மற்றும் மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) மசோதா போன்றவை அடங்கும். இவற்றுடன், வருமான வரி – 2025 மசோதாவையும் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவிற்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானமும் இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட உள்ளது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பஹல்காம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்: ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.