திருப்பதி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து திருப்பதி மலையில் ஹை அலர்ட் பிறப்பிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பஹல்காம் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து திருப்பதி மலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலைப்பாதையின் இணைப்புச் சாலை அருகே வாகனங்கள் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாகனங்களும், பக்தர்களின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. திருப்பதி மலையில் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்கள், சந்திப்புகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை தீவிரமான சோதனைக்குப் பிறகே தேவஸ்தான நிர்வாக ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
The post பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: திருப்பதி மலையில் ஹை அலர்ட் தீவிர சோதனை appeared first on Dinakaran.