ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் ரமீஸ். இவரது மனைவி உர்ஷா. இவர்களுக்கு உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இரட்டை குழந்தைகள் இருந்தன. இவர்கள் 5 நிமிட இடைவெளியில் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி பிறந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பாத்திமா, ஜைன் அலியும் இறந்தனர். இதுகுறித்து அவர்களது தாய்மாமாவான ஆதில் பதான் கூறுகையில், “கடந்த 7ம் தேதி தொடர்ச்சியாக பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். அதில் உர்பா பாத்திமாவும், ஜைன் அலியும் அடங்குவர்.
இரட்டையர்களாக பிறந்து இணை பிரியாமல் வசித்து வந்த இருவரும், குண்டுவீச்சு தாக்குதலில் ஒரு நிமிட இடைவெளியில் உயிரிழந்து விட்டனர். இந்த தாக்குதலில் இவர்களின் தந்தை ரமீஸும் காயமடைந்தார். அவர் பூஞ்ச் மாவட்டம் மண்டியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடப்பதை அறிந்த நான் அவர்களை காப்பாற்றுவதற்காக ஓடினேன். ஆனால் குண்டுவெடித்து அவர்களை பலிகொண்டு விட்டது. உர்பா பாத்திமா, ஜைன் அலி, ரமீ்ஸ் ஆகியோரை ஜீப்பில் மருத்துவமனைக்கு நான்தான் அழைத்து சென்றேன்.
ஆனால் வழியில் இருவரும் உயிரிழந்தனர். இறந்த விவகாரம் ரமீஸுக்கு இதுவரை தெரியாது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை உர்ஷா கவனித்து வருகிறார்’’என்றார். இரட்டையர்களாக பிறந்தவர்கள் சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post பாக். குண்டுவீச்சில் 11 வயது இரட்டையர்கள் உயிரிழப்பு: சாவிலும் இணை பிரியாதவர்கள் appeared first on Dinakaran.