ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பு அதிகரித்து உள்ளது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ஷுக்ரூ கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதற்கு பாதுகாப்பு படையினரும் உரிய பதிலடி கொடுத்தனர். இந்ததுப்பாக்கிச் சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்கள் ஷாஹித் குட்டாய் மற்றும் அட்னான் ஷாபி என்பது தெரிய வந்துள்ளது. மூன்றாவது நபரின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது. ஷோபியனின் சோட்டிபோரா ஹீர்போரா பகுதியைச் சேர்ந்த ஷாஹித் குட்டாய், 2023 மார்ச் மாதம் பயங்கரவாதப் படையில் சேர்ந்தார், அவர் ‘‘ஏ” வகை பயங்கரவாதி. அந்த அமைப்பின் உயர் தளபதி. 2024 மே 18 அன்று ஹீர்போராவில் பாஜ பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டது உட்பட பல பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகளில் குட்டாய் ஈடுபட்டதாக அவர் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, கடந்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி, குட்டாய்க்குச் சொந்தமான குடியிருப்பு வீட்டை அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். ஷோபியனின் வாண்டுனா மெல்ஹோரா பகுதியில் வசிக்கும் ஷாபி, 2024 அக்டோபரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் சேர்ந்தவர். இவர் ‘சி’ வகை பயங்கரவாதி. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* ராஜ்நாத்சிங் ஆய்வு
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நேற்று மூத்த ராணுவ அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திரா திரிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே. திரிபாதி, பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* காஷ்மீர், பஞ்சாப் எல்லை மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் மூடல்
காஷ்மீர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் தவிர, அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரில் குப்வாரா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களிலும், பந்திப்போராவின் குரேஸ் தாலுகாவில் உள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் இப்போதைக்கு மூடப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். காஷ்மீர் பல்கலைக்கழகம் இன்று முதல் வகுப்புகளை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், பாசில்கா, பெரோஸ்பூர், டர்ன் தரன் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அமிர்தசரஸ் மற்றும் ஹோஷியார்பூரின் தசுயா மற்றும் முகேரியன் பகுதிகளில் நேற்று இரவு மின்தடை அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கலாம் என்று அமிர்தசரஸில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் குருதாஸ்பூரில் உள்ள பள்ளிகளும், சங்ரூர் மற்றும் பர்னாலாவில் உள்ள பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன.
* பஹல்காம் தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கும் சுவரொட்டிகள் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. அவர்கள் ஆசிப் பௌஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா ஆகிய பாகிஸ்தானியர்கள் ஆவர். அவர்கள் மூசா, யூனுஸ் மற்றும் ஆசிப் என்ற பெயர்களைக் கொண்டிருந்தனர். மேலும் சுவரொட்டியில் அவர்களது புகைப்படங்கள் உள்ளன. அந்த சுவரொட்டியில்,’அப்பாவிகளைக் கொன்றவர்களுக்கு நம் நாட்டில் இடமில்லை’என்று கூறப்பட்டுள்ளது.
* பாக். தாக்குதலில் காயம் அடைந்த பஞ்சாப் பெண் பலி
பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் காயமடைந்த பஞ்சாப் பெண் மரணம் அடைந்தார். கடந்த வாரம் 9ஆம் தேதி பஞ்சாபின் பெரோஸ்பூரில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் கை பீமே கே கிராமத்தில் உள்ள லக்விந்தர் சிங் வீட்டின் மீது ஏவுகணை பாகங்கள் விழுந்தன. இதனால் லக்விந்தர் சிங் (55), அவரது மனைவி சுக்விந்தர் கவுர் மற்றும் அவர்களது மகன் மோனு சிங் (24) ஆகியோர் காயமடைந்தனர். ஒரு கட்டிடம் மற்றும் ஒரு கார் தீப்பிடித்தது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 50 வயதான பெண்மணி சுக்விந்தர் கவுர் நேற்று பலியானார்.
* நாடாளுமன்ற குழு முன்பு விக்ரம் மிஸ்ரி விளக்கம்
பஹல்காம் தாக்குதல் அதை தொடர்ந்து 4 நாட்கள் நடந்த போர் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நாடாளுமன்ற வெளிவிவகாரங்களுக்கான குழு முன்பு மே 19ல் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த குழுவின் தலைவராக திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிதரூர் உள்ளார்.
* இந்திய இணையதளங்களை குறிவைத்து 15 லட்சம் தாக்குதல்கள்
பஹல்காம் போரை தொடர்ந்து இந்திய இணைய தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து 15 லட்சம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல்களில் 150 தாக்குதல்கள் தான் வெற்றி அடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேஷியா, மொராக்கோ, கிழக்கு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் நடந்து இருப்பதாக கூறினர்.
* இந்தியாவுக்கு ரூ.50,000 கோடி பொருளாதார இழப்பு?
பாகிஸ்தானுக்கு எதிரான 4 நாட்கள் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடி நடவடிக்கையால், இந்தியாவுக்கு ரூ.50,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், பொருளாதார மறுசீரமைப்பு மூலம் ஈடுகட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
* போரில் பணிக்கு வராத மருத்துவ ஊழியர்கள் சம்பளம் நிறுத்தம்
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது காஷ்மீரில் மருத்துவமனை ஊழியர்கள் ஓட்டம் பிடித்ததால் அவர்களின் சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்று ரஜோரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
* ராணுவ டிரோன் உபியில் மாயம்
உபியில் பயிற்சிக்காக பயன்படுத்திய ராணுவ டிரோன் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீரட் ரயில்வே சாலை காவல் நிலையத்தில் மின்னணு மற்றும் இயந்திர பொறியாளர் படையின் தொழில்நுட்ப வல்லுநர் ஹவில்தார் மேஜர் தீபக் ராய் அளித்த புகாரின்படி, திங்கள்கிழமை மாலை நகர ரயில் நிலையம் அருகே, ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஒரு டிரோன் பறக்கவிடப்பட்டபோது கட்டுப்பாட்டு மானிட்டருடனான இணைப்பை இழந்து டிரோன் மாயமானது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* ஸ்ரீநகர் ஏர்போர்ட் மீண்டும் இயக்கம்
ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் விமான சேவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா, பாகிஸ்தான் போர் காரணமாக நகர் உள்பட 32 விமான நிலையங்கள் மே 9 முதல் தற்காலிகமாக மூடப்பட்டன. நேற்று முன்தினம் அனைத்தும் திறக்கப்பட்டாலும், ஸ்ரீநகர் விமான நிலையம் திறக்கப்படவில்லை. நேற்று அவை திறக்கப்பட்டன.
* எல்லையில் படைகளை குறைக்க உடன்பாடு
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் படைகளைக் குறைக்க உடன்பாடு எட்டப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
The post பாதுகாப்பு படையினர் அதிரடி காஷ்மீர் என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் பலி appeared first on Dinakaran.