ஜெய்ப்பூர்: பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோர் ஜெய்ப்பூர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் பட்டியலில் உள்ள பான் மசாலா தொடர்பான விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் இருந்து வந்தன. இதற்கு காரணம், குறிப்பிட்ட பான் மசாலாவில் குங்குமப்பூ தூள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த பான் மசாலாவில் குங்குமப்பூ தூள் இல்லை என்று கூறப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் என்பவர், ஜெய்ப்பூர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் மற்றும் பான் மசாலா நிறுவனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் விளம்பரப்படுத்தும் பான் மசாலாவில் குங்குமப்பூ தூள் எதுவும் இல்லை. நுகர்வோரை ஏமாற்றுவதற்காக குங்குமப்பூ தூளுடன் கூடிய பான் மசாலா என்று கூறி விற்பனை செய்கின்றனர். இவர்களது செயல்கள் நுகர்வோரை ஏமாற்றுவதாகும். ஒரு கிலோ ரூ.4 லட்சம் விலை கொண்ட குங்குமப்பூவை, ரூ.5க்கு விற்கப்படும் பான் மசாலாவில் எவ்வாறு சேர்க்க முடியும்? மேற்கண்ட தயாரிப்பு நிறுவனத்தால் சப்ளை செய்யப்படும் பான் மசாலாவில் குங்குமப்பூவோ அல்லது அதன் மணமோ இல்லை.
எனவே தவறான தகவல்களை விளம்பரம் செய்து பரப்புவதால், அந்த விளம்பரங்களை திரும்பப் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும், போலியான விளம்பரம் செய்த நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. மேற்கண்ட மனுவை விசாரித்த ஜெய்ப்பூர் நுகர்வோர் குறைதீர் மன்றம், சம்பந்தப்பட்ட பான்மசாலா நிறுவன அதிகாரிகள் மற்றும் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோர் வரும் 19ம் தேதி குறைதீர் மன்றத்தில் ஆஜாராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ எனக்கூறி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post பான் மசாலா விளம்பரத்தில் நடித்த 3 பாலிவுட் நடிகர்களுக்கு நோட்டீஸ்: நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடி appeared first on Dinakaran.