புவனேஸ்வர்: ஒடிசாவில் தனது பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பக்கீர் மோகன் கல்லூரியில் 2ம் ஆண்டு பிஎட் படித்த 20 வயது மாணவி, கல்வியியல் துறைத் தலைவர் சமீரா குமார் சாகு தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கல்லூரியின் புகார் குழுவில் புகாரளித்தார். இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கல்லூரி முதல்வர் திலீப் கோஷிடம் கடந்த 12ம் தேதி நேரில் முறையிட்டார். அதன் பின்னர் கல்லூரி வளாகத்திலேயே அந்த மாணவி தீக்குளித்தார். 95 சதவீத தீக்காயத்துடன் பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவியின் தீக்குளிப்பு ஒடிசாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் சமீரா சாகு மற்றும் கல்லூரி முதல்வர் திலீப் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கடுமையான தீக்காயங்களுடன் 3 நாட்களாக உயிருக்கு போராடி வந்த அந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து எய்ம்சின் தீக்காய மைய பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஐசியுவில் மாணவிக்கு சாத்தியமான அனைத்து சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி 14ம் தேதி இரவு 11.46 மணிக்கு உயிரிழந்தார்’’ என கூறப்பட்டுள்ளது.
மாணவியின் உடல் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த கிராமமான பலாசியாவுக்கு அனுப்பப்பட்டது. அப்போது மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பிஜூ ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், பாஜ அரசின் தோல்வியை மறைக்க அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து மாணவியின் உடல் அனுப்பப்படுவதாக குற்றம்சாட்டினர். ஒடிசா துணை முதல்வர் பிரவதி பரிதா உள்ளிட்டோர் மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
பின்னர், மாணவியின் உடல் அவரது சொந்த கிராமத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தகன மையத்திற்கு வந்து, மாணவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பாலசோர் பாஜ எம்பி பிரதாப் சாரங்கி மற்றும் மாவட்ட கலெக்டர், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்திருந்தனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தினர். மாணவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி, இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அத்தனை குற்றவாளிகளும் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என உறுதி அளித்துள்ளார்.
தனக்கு எதிரான பாலியல் கொடுமை குறித்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மாநில உயர்கல்வி அமைச்சர், முதல்வர் அலுவலகம் மற்றும் பாஜ எம்பி சாரங்கி உள்ளிட்டவர்களிடம் நேரில் முறையிட்டும் எதுவும் நடக்காததால் அந்த மாணவி விபரீத முடிவை எடுத்து மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விரைவு விசாரணை குழு
மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க ஒடிசா போலீசார் விரைவு விசாரணை குழுவை அமைத்துள்ளனர். இக்குழுவில் விசாரணை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மருத்துவ பதிவுகள், டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து தடயவியல் ஆய்வு மேற்கொள்வதாக காவல்துறை டிஜஜி சத்யஜித் நாயக் கூறி உள்ளார்.
ரூ.20 லட்சம் கருணை தொகை
தீக்குளித்து இறந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
தோல்வி அடைந்த அரசு உயிரை பறித்து விட்டது
எதிர்க்கட்சி தலைவரான பிஜூ ஜனதா தளத்தின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ‘‘தோல்வி அடைந்த அமைப்பு, ஒரு உயிரை பறித்து விட்டது. இது ஒன்றும் விபத்தல்ல. பாதிக்கப்பட்டவருக்கு உதவாமல், இந்த அமைப்பு மவுனம் காத்தது மிகுந்த வலியை தருகிறது. நீதிக்காக போராடிய அந்த மாணவி இறுதியில் தனது கண்களை மூடி உள்ளார்’’ என்றார்.
காங்கிரஸ் தலைமையில் நாளை பந்த்
ஒடிசா மாணவி மரணத்தை தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையில் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாளை பந்த் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.
4 பேர் கொண்ட குழு அமைத்தது யுஜிசி
மாணவி தீக்குளிப்பு தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) 4 பேர் குழுவை அமைத்துள்ளது. இது குறித்து யுஜிசி செயலாளர் சுதீப் சிங் கூறுகையில், ‘‘சம்பவம் குறித்த சூழ்நிலை, கல்வி நிறுவனத்தின் கொள்கைகள், ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்குதல் குறித்து இக்குழு ஆய்வு செய்யும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை குழு பரிந்துரைக்கும். குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகப் பேராசிரியரும் யுஜிசி உறுப்பினருமான ராஜ் குமார் மிட்டல் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவார்’’ என்றார்.
The post பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த ஒடிசா கல்லூரி மாணவி மரணம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என முதல்வர் உறுதி appeared first on Dinakaran.